

அண்ணாமலை | கோப்புப் படம்
கூட்டணிக் கட்சிகளையும் சேர்த்து மொத்தமாக 35 தொகுதிகளில் தாமரை போட்டியிடுகிறது. இருந்தாலும், “இத்தனை பேருக்கு சீட் ஒதுக்கியவர்களுக்கு அண்ணாமலைக்கு ஒரு சீட் ஒதுக்க முடியவில்லையா?” என்ற கேள்வியே பாஜக தொண்டர்கள் மத்தியில் இப்போது பெரும் விவாதமாக இருக்கிறது.
2024 மக்களவைத் தேர்தல் சமயத்திலிருந்தே அண்ணாமலைக்கும் அதிமுக-வுக்கும் ஒத்துப்போகவில்லை. அதிலும் குறிப்பாக, எடப்பாடி பழனிசாமிக்கும் அண்ணாமலைக்குமான மோதல் கூட்டணியை முறிக்கும் அளவுக்குப் போனது. இருந்த போதும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-வுடன் மீண்டும் கூட்டணி வைத்து, விட்ட இடத்தைப் பிடிக்க நினைத்த பாஜக தலைமை, அதற்காக அண்ணாமலையை ஒதுக்கிவிட்டு பழனிசாமிக்கு தோதான நயினார் நாகேந்திரனை தலைவர் பதவியில் அமர்த்தியது.
தலைவர் பொறுப்புக்கு நயினார் வந்தாலும் மாநிலம் முழுமைக்கும் அண்ணாமலையால் நியமிக்கப்பட்டவர்களே முக்கியப் பொறுப்புகளில் இருந்ததால் கட்சியின் அறிவிக்கப்படாத தலைவராகவே வலம் வந்தார் அண்ணாமலை. பிரதமர், உள்துறை அமைச்சர் பங்கேற்கும் பொது நிகழ்ச்சிகளில் அண்ணாமலை என்ற பெயரைச் சொன்னாலே ஆர்ப்பரித்தது காவிக் கூட்டம்.
அதேசமயம் அண்ணாமலை காலத்தில் தமிழக பாஜக-வுக்குள் இருந்த எழுச்சியும் வேகமும் நயினார் வந்த பிறகு சற்றே மழுங்கிப் போனது. இதையெல்லாம் கோடிட்டுக் காட்டியவர்கள், “தேர்தலுக்குப் பிறகு மீண்டும் அண்ணாமலையை தலைவராக்கிவிடுவார் அமித் ஷா” என்று சொன்னார்கள். இன்னும் சிலரோ, “தமிழக பாஜக-வுக்கு தனித்த முகம் கொடுத்த அண்ணாமலையை டெல்லி தலைமை கறிவேப்பிலை கணக்காய் தூக்கிப் போட்டுவிட்டது.
அதனால் அவர் தனிக் கட்சி தொடங்கி விஜய்யுடன் கூட்டணி வைக்கப் போகிறார்” என்றும் செய்திகளைப் பரப்பினார்கள். அதற்கேற்ப பனையூர் வட்டத்திலும் சிலருடன் தொடர்பில் இருந்தார் அண்ணாமலை. அதேசமயம் தனக்குள்ளே வருத்தங்கள் இருந்தாலும் அதையெல்லாம் வெளிக்காட்டிக் கொள்ளாதவர், “இப்போது நான் பாஜக-வின் சாதாரண தொண்டனாக தலைமை எனக்கு இட்ட பணியைச் செய்துட்டு இருக்கேங்கண்ணா” என்று அடக்கி வாசித்தார். தனது பெயரால் மன்றங்களைத் தொடங்கியவர்களைக் கூட “இதெல்லாம் வேண்டாம் தம்பிகளா” என்று அணை போட்டார்.
தலைவர் பதவியில் இல்லை என்றாலும் தமிழக அரசியலில் தீர்மானிக்கும் சக்தியாக பாஜக-வை உருமாற்றம் செய்ய தன்னால் ஆன முயற்சிகளை செய்து கொண்டே இருந்தார் அண்ணாமலை. ஆளும் திமுக-வுக்கு எதிராக அவர் எடுத்துவைத்த விமர்சனங்கள் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தின. ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்களை பாஜக கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்பதிலும் பிடிவாதமாக இருந்தார் அண்ணாமலை. ஆனால், அவரின் இந்த முயற்சிகளை அதிமுக தலைமை ரசிக்கவில்லை.
தேர்தலுக்குப் பிறகு பழனிசாமிக்கு இக்கட்டான சூழல் ஏற்பட்டால் தினகரனை வைத்து சதுரங்கம் ஆடிப் பார்க்கலாம் என்ற ‘பி பிளான்’ உடன் தான் அவரை கூட்டணிக்குள் கொண்டுவர சிலர் மெனக்கிடு வதாகவும் சொல்லப்பட்டது. இந்த விஷயத்தில் அண்ணாமலை சொல்வதைக் கேட்டுக்கொண்டு அமித் ஷா உள்ளிட்டவர்கள் தனக்கு நெருக்கடி கொடுப்பதாக பழனிசாமி முகம் சுளித்தார். அதேசயம், கொங்கு மண்டலத்தின் அரசியல் முகமாக பழனிசாமி இருக்கையில் அவருக்குப் போட்டியாக அந்தப் பகுதியில் இன்னொரு அரசியல் தலைவராக அண்ணாமலை வளர்வதை அதிமுக மட்டுமல்லாது பாஜக-வுக்குள்ளும் சிலர் விரும்பவில்லை.
இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் உள்ளிட்ட 6 தொகுதிகளுக்கான பாஜக தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலையை கடந்த பிப்ரவரியில் அறிவித்தது தமிழக பாஜக. ஆனால், தனது தந்தையின் உடல்நிலையைக் காரணம் காட்டி அந்தப் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்த அண்ணாமலை, “நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும் நேரமும் தான் முடிவு செய்யும்” என்று சொன்னார்.
அவர் இப்படி சஸ்பென்ஸ் வைத்தாலும் சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடும் திட்டத்துடன் அவர் இருந்ததாகச் சொல்கிறார்கள். ஆனால், தொகுதிப் பங்கீட்டில் இந்த இரண்டு தொகுதிகளையும் தனக்காக வைத்துக் கொண்டுவிட்டது அதிமுக. பல்லடத்தைக் கேட்டுப் பார்த்தது பாஜக. அதுவும் நடக்கவில்லை. இந்தத் தொகுதிகளைக் கொடுத்தால் அண்ணாமலை களத்துக்கு வருவார் என்பதாலேயே முந்திக் கொண்டது அதிமுக.
அண்ணாமலைக்காக இதில் ஒன்றைக் கேட்டுப் பெறவும் பாஜக தரப்பில் யாரும் பிடிவாதமாக முயற்சிக்கவும் இல்லை என்கிறார்கள். அண்ணாமலைக்கு மட்டுமல்லாது அவரது விசுவாசிகள் சிலருக்கும் இம்முறை சீட் இல்லாத நிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இதையெல்லாம் எதிர்த்துக் கேட்கமுடியாமல் உள்ளுக்குள்ளேயே பொசுங்கினார் அண்ணாமலை.
அதிமுக - பாஜக கூட்டணி அமைந்துவிட்டாலும் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியை சரியாகக் கட்டமைக்கத் தவறிவிட்டோம் என்ற ஆதங்கம் அண்ணாமலைக்கு இருக்கிறது. மேலும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கேட்டுப் பெறவும் பாஜக தலைமை தவறிவிட்டதாக ஆதங்கப்படும் அண்ணாமலை தரப்பு, “அமைச்சர்கள் போட்டியிடும் தொகுதிகளை எல்லாம் பாஜக, தமாகா, அமமுக உள்ளிட்ட கட்சிகளின் தலையில் கட்டிவிட்டார் பழனிசாமி” என ஆத்திரப்படுகிறது. இப்படியான சூழலில், இந்தத் தேர்தல் முடிவுகள் தரப்போகும் சாதக - பாதகங்களில் தனக்கு எந்தப் பங்கும் இருக்க வேண்டாம் என்று அமைதியாக ஒதுங்கிவிட்டார் அண்ணாமலை.
ஆனாலும், களத்தில் அண்ணாமலை இல்லாமல் போனால் அது பாஜக-வுக்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும் என நினைக்கும் பாஜக தலைவர்கள் சிலர், “இன்னும் ரெண்டு நாள் பொறுங்க” என்று நமக்கு சஸ்பென்ஸ் வைக்கிறார்கள்.ரெண்டு நாளில் என்ன நடக்கிறதென்று பார்க்கலாம்.