‘சவுமியா அன்புமணியை நீக்க சட்டத்தில் இடமில்லை; அவரே தலைவர்’ - பசுமைத் தாயகம் அறிக்கை

சவுமியா அன்புமணி

சவுமியா அன்புமணி

Updated on
2 min read

சென்னை: ‘பசுமைத் தாயகத்தின் தலைவரை யாரும் நீக்கவும் சட்டத்தில் இடமில்லை. பசுமைத் தாயகத்தின் தலைவர் தாமாக பதவி விலகினால் தான் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். எனவே, பசுமைத் தாயகம் தலைவராக சவுமியா அன்புமணி நீடிக்கிறார்’ என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பசுமைத் தாயகம் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சவுமியா அன்புமணி 2004-ஆம் ஆண்டு முதல் பசுமைத் தாயகம் தலைவராக இருக்கிறார். அதற்கு முன்பு 2002-ஆம் ஆண்டு முதலே பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழின் ஆசிரியராக சிறப்பாக செயல்பட்டுவருகிறார்.

2002 - ஐநா புவி உச்சிமாநாடு தொடங்கி, 2009 ஐநா கோபன்ஹெகன் காலநிலை மாநாடு என ஏராளமான சர்வதேச சுற்றுச்சூழல் நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். இன்று பரபரப்பாக பேசப்படும் பள்ளிக்கரணை சதுப்புநிலத்தை காக்க 2003-ஆம் ஆண்டிலேயே ஆவணப்படம் வெளியிட்டவர் அவர். தமிழ்நாட்டின் சமச்சீர் கல்விக்கு வழிவகுத்த 'இன்றைய தேவைக்கேற்ற கல்வி முறை' எனும் மாநாட்டை பசுமைத் தாயகம் சார்பில் நடத்தியவர் அவர்தான்.

தமிழ்நாடெங்கும் லட்சக்கணக்கான மரங்களை நட்டுவளர்த்தவர் சவுமியா அன்புமணி. நூற்றுக்கணக்கான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பல்வேறு கல்லூரிகளில் நடத்தி தமிழ்நாட்டில் சுற்றுச்சூழல் அறிவை வளர்த்தவர்களில் அவர் முக்கியமானவர்.

இருபது ஆண்டுகாலமாக அவர் நடத்திவரும் பசுமைத் தாயகம் சுற்றுச்சூழல் இதழின் தலையங்க கட்டுரைகள் ஒரு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. "கான மயிலாட கண்டிருந்த வான்கோழி தானும் அதுவாகப் பாவித்துத் தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடினார் போலுமே" - என்பது ஔவையார் இயற்றிய மூதுரை நூலில் உள்ள ஒரு பாடல் ஆகும்.

'மயிலைப் பார்த்து வான்கோழியும் தனது சிறகை விரித்து ஆட முயன்றது' போன்று, சுற்றுச்சூழல் அரசியல் குறித்து எள்முனையளவு கூட ஏதும் அறியாத யாரோ ஒருவரைக் காட்டி, பூசாரிகள் சில திடீர் அறிவிப்புகளை வெளியிடுகிறார்கள். அவை வெறும் கேலிக்கூத்துகள் தவிர வேறெதுவும் இல்லை.

முதலில் பசுமைத் தாயகம் ஒரு அரசு சாராத தொண்டு அமைப்பு. அது அரசியல் கட்சியின் துணை அமைப்பு இல்லை. அரசியல் கட்சிக் கூட்டங்களில் பசுமைத் தாயகத்தின் நடவடிக்கைகளை தீர்மானிக்க முடியாது.

பசுமைத் தாயகத்தின் தலைவரை யாரும் நீக்கவும் சட்டத்தில் இடமில்லை. பசுமைத் தாயகத்தின் தலைவர் தாமாக பதவி விலகினால் தான் அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். பசுமைத் தாயகத்துக்கு புதிய தலைவரை நியமிப்பதாக அறிவிப்பதெல்லாம் வெறும் வெட்டி அறிவிப்புகள் தவிர வேறெதுவும் இல்லை.

எனவே, பசுமைத் தாயகம் தலைவராக சவுமியா அன்புமணி நீடிக்கிறார். அதில் எந்த மாற்றமும் இல்லை. 'எதை தின்றால் பித்தம் தெளியும் என தெரியாமல்' பேசுகிற பூசாரிகள் கும்பல் - தேர்தல் அறிவிக்கப்படும் வரை இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டிருப்பார்கள். அவற்றில் நம் நேரத்தை வீணடிக்காமல் ஆக்கபூர்வமான நமது பணிகளில் கவனம் செலுத்துவோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராமதாஸ் தலைமையிலான பாமக சார்பில் இன்று சேலத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சவுமியா அன்புமணியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை பசுமை தாயகம் அமைப்பின் தலைவராக தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

<div class="paragraphs"><p>சவுமியா அன்புமணி</p></div>
“நான் அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை!” - கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in