“நான் அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை!” - கண்ணீர் விட்டு அழுத ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்
ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: “நான் அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை. அவர் என்னை மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்துகிறார். ஒவ்வொரு நாளும் சில நபர்களை வைத்து என்னை அவமானப் படுத்துகிறார் அன்புமணி” என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

ராமதாஸ் தலைமையிலான பாமக சார்பில் இன்று சேலத்தில் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பாமக தலைவராக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதுமட்டுமின்றி பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் பதவியில் இருந்து சவுமியா அன்புமணியை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், ராமதாஸின் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதியை பாமக செயல் தலைவராகவும், பசுமை தாயகம் அமைப்பின் தலைவராகவும் தேர்வு செய்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதேபோல 2026 சட்டப்பேரவை தேர்தல் கூட்டணியை இறுதி செய்யும் அதிகாரத்தை ராமதாஸுக்கு அளித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் பேசுகையில், “சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் சரியான முடிவெடுத்து அறிவிப்பேன். 10.5 சதவீத இடஒதுக்கீட்டை உறுதியாக பெறுவோம். அன்புமணி தலைமையிலான கும்பல் என்னையும், ஜி.கே.மணியையும் அத்தனை இழிவாக தூற்றுகிறார்கள். என்னைக் கொல்வதாக பதிவு போட்டவருக்கு அன்புமணி பொறுப்பு கொடுக்கிறார். நான் அன்புமணியை சரியாக வளர்க்கவில்லை. அவர் என்னை மார்பிலும், முதுகிலும் ஈட்டியால் குத்துகிறார்.

நான் அவருக்கு ஒரு குறையும் வைக்கவில்லை. அவர் என்னை துண்டுத் துண்டாக வெட்டிப் போட்டிருந்தால் கூட நான் போய் சேர்ந்திருப்பேன். ஆனால், ஒவ்வொரு நாளும் சில்லறை பசங்களை வைத்து என்னை அவமானப் படுத்துகிறார் அன்புமணி. அன்புமணி ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார், இன்னும் சில ஆண்டுகள் பொறுமையாக இருக்கக்கூடாதா என பலரும் இப்போது கேட்கிறார்கள். செயற்குழு, பொதுக்குழுவை பார்க்கும்போது 95 சதவீத பாமகவினர் என் பின்னால்தான் உள்ளனர் என்பது தெரிகிறது. அவர் பக்கம் 5 சதவீதம் பேர் கூட இல்லை. ஆனாலும், கோடிக்கணக்கில் செலவு செய்து பம்மாத்து காட்டுகிறார்.

இந்தத் தேர்தலில் நான் நல்ல கூட்டணியை அமைப்பேன். அந்தக் கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். நான் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுடன் யாருடன் கூட்டணி வைக்கலாம் என கருத்துகளை கேட்டேன். அவர்கள் சொன்ன கருத்தின் அடிப்படையில் கூட்டணியை அமைப்பேன்.

கூட்டணி அமைப்பதற்கான நேரம் இன்னும் கனியவில்லை. சில நேரங்களில் தூக்க மாத்திரை போட்டால்கூட தூக்கம் வருவதில்லை. ஆனால் பாட்டாளி சொந்தங்களை நினைக்கும்போது புத்துணர்ச்சி வருகிறது” என்று கூறினார். இந்த பேச்சின்போது ஒரு கட்டத்தில் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு ராமதாஸ் அழுததால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமதாஸ் | கோப்புப் படம்
மகாராஷ்டிர மாநகராட்சி தேர்தல்: சரத் பவார் கட்சியுடன் அஜித் பவார் கட்சி கூட்டணி!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in