

சென்னை: “தொகுதி மறுவரையறை விவகாரத்தில் திமுக நிலைப்பாட்டில் எந்த மாற்றமும், சமரசமும் இல்லை,” என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தொகுதி மறுவரையறை குறித்த மசோதாவை நிறைவேற்ற சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்திற்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, ஒன்றிய அரசு திமுகவுடன் ஒரு புரிந்துணர்வுக்கு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது கவலை அளிக்கிறது.
தமிழ்நாட்டின் நலன் மற்றும் தென் மாநிலங்களின் நலன் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் திமுக உறுதியாக இருக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். யூகங்களுக்கு இடம் தராமல் தொகுதி மறு வரையறை குறித்த தங்களது நிலைபாட்டை திமுக தலைமை மக்களுக்கு தெளிவுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் பெ.சண்முகத்தின் பதிவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சில கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “தொகுதி மறுவரையறையால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து இந்தியாவிலேயே முதன் முதலில் குரல் எழுப்பியது திமுகதான்! நியாயமான மறுவரையறை என்ற கோரிக்கையுடன் அகில இந்தியத் தலைவர்களை ஒன்றிணைத்து முதன் முதலில் கூட்டம் நடத்தப்பட்டதும், சென்னையில்தான்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படியும், நியாயமான தொகுதி மறுவரையறைக்கான கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின்படியும், நாம் முன்வைத்த உறுதியான கோரிக்கைகள்:
• நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டால், எக்காரணத்தைக் கொண்டும், தமிழ்நாட்டின் பங்கு தற்போதுள்ள 7.18%-ல் இருந்து குறையக் கூடாது!
• 1971 மக்கள்தொகை அடிப்படையில், மாநிலங்களுக்கு இடையேயான நாடாளுமன்றப் பிரதிநிதித்துவ விகிதாசாரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு, முன்னர் நிலைப்படுத்தப்பட்டவாறே, அடுத்த 25 ஆண்டுகளுக்கும் எந்தவித மாற்றமும் செய்யப்படக் கூடாது!
எடுத்த இந்த இரண்டு நிலைப்பாட்டிலும் திமுக இன்றும் என்றும் உறுதியாக இருக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை, சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
ஊடகங்களில் பரப்பப்படும் ஊகங்களும், முதுகுகுத்திகளின் முணுமுணுப்புகளும் எங்களது இந்த நிலைப்பாட்டை எந்த விதத்திலும் அசைத்துப் பார்க்காது.
பதவிக்காகக் கொள்கையை உதறிவிட்டுச் செல்லும் மானமற்ற, நன்றிகெட்ட கூட்டத்தினர் இதனை உணர வேண்டும். தமிழ்நாட்டின் நலனைக் கழகம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. கொண்ட கொள்கையில் இருந்து தடம் மாறாது!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாளை (நவ.28) காலை 10 மணிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர் நவம்பர் 30-ம் தேதி தொடங்குகிறது. இதன்படி, நவம்பர் 30-ம் தேதி மக்களவையும், டிசம்பர் 2-ம் தேதி மாநிலங்களவையும் கூடுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியலமைப்புச் சட்டத்தின் 131-வது திருத்த மசோதா 2026, தொகுதி மறுவரையறை மசோதா 2026, யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா 2026 ஆகிய 3 மசோதாக்கள் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன.
அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதாக்கள் என்பதால், இவற்றை நிறைவேற்ற இரு அவைகளிலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு அவசியம். கடந்த ஏப்ரலில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தொடரில் போதிய ஆதரவு கிடைக்காததால் 3 மசோதாக்களும் தோல்வியடைந்தன.
இந்நிலையில், இந்தச் சிறப்புக் கூட்டத்தொடரில் 3 மசோதாக்களையும் மீண்டும் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.