

சென்னை: அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய இரு தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்தலாம். திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு தேர்தல் வழக்கு முடிந்த பிறகே இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டு விஜய் வெற்றி பெற்றார். பின்னர் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்தார்.
இதேபோல அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதுராந்தகம் மரகதம் குமரவேல், தாராபுரம் சத்தியபாமா, கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை சி.விஜயபாஸ்கர், அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, பெருந்துறை எஸ்.ஜெயக்குமார் ஆகியோரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல்வர் விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட இனிகோ இருதயராஜும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட வி.பி.மதியழகனும், சி.விஜயபாஸ்கர் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட செல்லபாண்டியனும், ஜெயக்குமார் வெற்றியை எதிர்த்து திமுக சார்பில் போட்டியிட்ட தோப்பு வெங்கடாச்சலமும், இசக்கி சுப்பையாவின் வெற்றியை எதிர்த்து வாக்காளரான காந்திமதி நாதனும், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தனர்.
அதேவேளையில், தேர்தல் வழக்கு நிலுவையில் உள்ள திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி திருநெல்வேலியை சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து ஜூலை 10-ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதனையடுத்து, 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியிட விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, முதல்வர் விஜய் மற்றும் ராஜினாமா செய்த முன்னாள் எம்எல்ஏ-க்கள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டிருந்த தடையை சென்னை உயர் நீதிமன்றன்றம் நீக்கி, இந்த இரு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடத்த அனுமதி அளித்துள்ளது.