

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் தலைவர்களுடன் பேசும் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்.
“கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம். இது கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். தியாகம் இல்லாவிட்டால் கூட்டணி இல்லை” என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
புதுச்சேரியில் தங்களுக்கு 21 தொகுதிகள் வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இதனால் இண்டியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்தியகம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக போன்ற கட்சிகள் காங்கிரஸிடம் பேசாமல் திமுக-விடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனால் தமிழகத்தை விட புதுச்சேரி இண்டியா கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் சிக்கல் நிலவுகிறது. இந்த நிலையில், புதுச்சேரி காங்கிரஸாருடன் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், கூடுதல் பொறுப்பாளர் அஞ்சலி நிமல்கர் ஆகியோர் நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது நிர்வாகிகள் தரப்பில், “கடந்த தேர்தல் நெருக்கத்தில் காங்கிரஸிலிருந்து பலர் வெளியேறினர். இதனால் கட்சிக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளைக் கூட திமுக-வுக்கு விட்டுக் கொடுத்தோம். ஆனால், களம் இப்போது நமக்குச் சாதகமாக உள்ளது.
இதனால் தனித்து ஆட்சி அமைக்கும் வகையில் கடந்த 2016-ம் ஆண்டைப் போல் 30-க்கு 21 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். காங்கிரஸுக்கு சாதகமான தொகுதிகளை விட்டுத் தரக்கூடாது” என வலியுறுத்தினர். இவற்றையெல்லாம் கேட்டுக் கொண்ட கிரிஷ் சோடங்கர், கட்சித் தலைமைக்கு தகவல் தெரிவித்து பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார்.
ஏற்கெனவே தமிழக கூட்டணி விவகாரத்தில் கிரிஷ் சோடங்கரின் செயல்பாடுகள் குறித்து திமுக தலைமை அதிருப்தி தெரிவித்துள்ளதால், புதுவை திமுக நேரடியாக சோடங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தாது எனக் கூறப்படுகிறது. அதற்கு ஏற்ப, பேச்சுவார்த்தை நடத்தவும் காங்கிரஸ் தரப்பில் காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரிஷ் சோடங்கர், “தமிழகத்தில் திமுக-வும், புதுச்சேரியில் காங்கிரஸும் கூட்டணிக்கு தலைமை வகிக்கும். யார் யார் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பற்றி பேச்சுவார்த்தைக் குழு முடிவு செய்யும். தற்போதைய புதுச்சேரி மாநில ஆட்சியில் ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் உள்ளதால் மக்கள் இண்டியா கூட்டணியை ஆட்சியில் அமர்த்துவார்கள். கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு திமுக-வுடன் பேசி எத்தனை தொகுதிகள் என்பதை முடிவெடுப்பார்கள். தமிழக ஃபார்முலாதான் புதுச்சேரிக்கும் பின்பற்றப்படும்.
கூட்டணி என்பதன் அர்த்தம் தியாகம். இது கூட்டணியிலுள்ள அனைத்துக் கட்சிகளுக்கும் பொருந்தும். தியாகம் இல்லாவிட்டால் கூட்டணி இல்லை. கூட்டணியில் ஒவ்வொரு கட்சியும் கூடுதல் தொகுதிகள் கேட்கத்தான் செய்வார்கள். பேசி தீர்வு காண்போம்.
கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக வழிமுறையையே புதுச்சேரியில் கையாள்வோம். புதுச்சேரியும் தமிழகமும் வெவ்வேறு மாநிலங்கள். இண்டியா கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் புதுச்சேரியில் நடைபெறும்” என்றார்.