

கோப்புப் படம்
கலைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணியால் திமுக-வுக்கு மீண்டும் சிக்கல்கள் எழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, கம்யூனிஸ்ட்கள், மதிமுக உள்ளிட்ட 22 கட்சிகள் உள்ளன. இந்த அணியில் தேமுதிக தான் கடைசியாக வந்து சேர்ந்தது. மற்ற கட்சிகள் நீண்டகாலமாக திமுக கூட்டணியில் இருக்கின்றன. ஆனால், கூட்டணியில் புதிதாக சேர்ந்த தேமுதிக-வுக்கு தரப்படும் முக்கியத்துவம் மற்ற தோழமை கட்சிகளிடம் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திமுக தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், ‘‘தலைவலியாக இருந்த காங்கிரஸ் பிரச்சினையை முடித்து சற்று மூச்சுவிடும் முன்னரே பழைய மக்கள் நலக் கூட்டணியால் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. தேமுதிக-வுக்கு 10 தொகுதிகள், 1 ராஜ்ய சபா சீட் தருவதாகச் சொல்லித்தான் கூட்டணிக்குள் கொண்டு வந்தது திமுக. ஆனால், மற்ற கட்சிகளை சமாளிப்பதற்காக 6 அல்லது 7 தொகுதி கள் வரை தேமுதிக-வுக்கு ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியிடப்பட்டன.
தேமுதிக-வை முன்வைத்து இடங்களை குறைத்துக் கொள்ளுமாறு மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் திமுக பேச்சுவார்த்தை நடத்தியது. அதில் மதிமுக 4, கம்யூனிஸ்ட்கள் தலா 5 இடங்களுக்கு கிட்டதட்ட சம்மதித்து விட்டன. விசிக-வுக்கு மட்டும் 8 தொகுதிகள் ஒதுக்க முடிவானது. ஆனால், தேமுதிக-வுக்கு 10 இடங்கள் தரும் தகவலறிந்த பின்னர், இந்த 4 கட்சிகளும் தங்களுக்கும் கூடுதல் தொகுதிகள் வேண்டுமென கொடிபிடிக்கின்றன. இதில் மதிமுக தனிச்சின்னம் கேட்டும் நச்சரிக்கிறது.
தேமுதிக-வுக்கு என்ன கொள்கை இருக்கிறது, நாங்கள் நீண்ட காலமாக கூட்டணியில் இருக்கிறோம். அவர்களுக்கு வாக்கு வங்கியும் பெரிதாக இல்லை என கம்யூனிஸ்ட்கள் கொந்தளிக்கின்றனர். அதனால் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சிகள் நடக்கின்றன. 2016-ல் மக்கள் நலக் கூட்டணியால் தான் திமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. மீண்டும் அதே கூட்டணியால் இப்போது சிக்கல் வந்துள்ளது” என்றனர்.
கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, அதிமுக, திமுக-வுக்கு மாற்றாக மக்கள் நலக் கூட்டணி உதயமானது. இதில் முதலில் விசிக, கம்யூனிஸ்ட், மதிமுக கட்சிகள் இடம்பெற்றன. பிறகு தேமுதிக, தமாகா வந்து சேர்ந்தன. இந்த அணியின் முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். அந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்ததால் மக்கள் நலக் கூட்டணியே உடைந்துபோனது. 2019 மக்களவைத் தேர்தலில் விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் திமுக கூட்டணியில் இணைந்தன. தற்போது 10 ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் நலக் கூட்டணியில் இருந்த தமாகா-வை தவிர மற்ற 5 கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பிடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.