

சென்னை: மேகேதாட்டு அணை விவகாரம் குறித்த அடுத்தகட்ட நடவடிக்கைகளை 10 நாட்களில் முதல்வர் அறிவிப்பார் என அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார்.
கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்குத் தண்ணீர் வரவில்லை. மேலும் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டவும் அந்த மாநில அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கிடையே மேகேதாட்டு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இந்த அணைக்கு எவ்வித அனுமதியும் மத்திய அரசு அளிக்கக்கூடாது எனவும் தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகேதாட்டு அணை விவகாரத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக சட்ட வல்லுநர்கள் மற்றும் காவிரி தொழில்நுட்பக் குழு அலுவலர்கள் அடங்கிய உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், தலைமைச் செயலர் மு.சாய்குமார், அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேகேதாட்டு அணை தொடர்பாக முதல்கட்டமாக அனைத்து வல்லுநர்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப் போராட்டம் நடத்திவரும் வழக்கறிஞர்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் பெறப்பட்ட ஆலோசனைகளின்படி அடுத்தகட்ட முடிவுகள் விரைவில் எடுக்கப்படும். இன்னும் 10 நாட்களில் என்னென்ன நடவடிக்கை எடுக்கப்போகிறோம் என்பது முடிவாகும்.
அனைத்துக் கட்சி கூட்டம்: இந்த விவகாரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத் தரப்பினரையும் அழைத்து முதல்வர் விஜய் ஆலோசனை நடத்தியுள்ளார். மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு என்னென்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை இறுதிசெய்து, கண்டிப்பாக 10 நாட்களுக்குள் முதல்வர் அறிவிப்பு வெளியிடுவார். தேவையெனில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுவது குறித்தும் ஆலோசித்து உரிய முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.