

சென்னை: புற்றுநோய் மருந்து தயாரிக்கப் பயன்படும் அரிய மண் தாதுக்கள், நிலக்கரி சாம்பலில் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கான வணிக ரீதியிலான உற்பத்தி ஆலை என்எல்சி மூலம் தமிழகத்தில் விரைவில் அமைக்கப்படும் என்று மத்திய நிலக்கரி, சுரங்கத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: முந்தைய காலகட்டங்களில் டெல்லியில் இருந்து அனுப்பும் நிதியில் ஒரு பகுதி மட்டுமே ஏழைகளைச் சென்றடைந்தது. மோடி அரசின் ஜன்தன் கணக்குகள், ஆதார் மற்றும் செல்போன் இணைப்பு மூலமாக, இடைத் தரகர்கள், புரோக்கர்கள் ஒழிக்கப்பட்டு, கடந்த 12 ஆண்டுகளில் சுமார் ரூ.34 லட்சம் கோடி எவ்வித ஊழலும் இன்றி நேரடியாக ஏழைகளின் வங்கிக் கணக்குக்குச் சென்றடைந்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் 70 ஆண்டுகள் ஜம்மு காஷ்மீரில் ‘பிரிவு 370’ நீட்டிக்கப்பட்டதால், 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். ஒரு நாட்டுக்கு 2 கொடிகள், 2 அரசியலமைப்பு என்ற நிலை இருந்தது. ஆனால், மத்திய பாஜக அரசு அதை துணிச்சலாக நீக்கி, அம்பேத்கரின் அரசியலமைப்பை அங்கு முழுமையாக அமல்படுத்தியுள்ளது.
கரோனா காலத்தில் உள்நாட்டிலேயே தடுப்பூசிகளைத் தயாரித்து, 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தோம். மத்திய நிலக்கரி அமைச்சகம் கடந்த 3 ஆண்டுகளில் முதல்முறையாக 1 பில்லியன் டன்னுக்கும் அதிகமான நிலக்கரியை உற்பத்தி செய்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இந்தியா தற்போது உலகின் 2-வது மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தியாளராகவும், 5-வது மிகப்பெரிய நிலக்கரி இருப்பைக் கொண்ட நாடாகவும் திகழ்கிறது.
செல்போன், லேப்டாப், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் விண்வெளி தொழில்நுட்பங்களுக்கு மிக அவசியமான லித்தியம், கோபால்ட் போன்ற முக்கிய தாதுக்களை உள்நாட்டில் கண்டறியவும், உலக நாடுகளில் உள்ள சுரங்கங்களைக் கையகப்படுத்தவும் ரூ.34,000 கோடி ஊக்கத் தொகையுடன் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினாவில் ஏற்கெனவே 5 லித்தியம் சுரங்கங்களை இந்தியா வாங்கியுள்ளது. ஆஸ்திரேலியா, சிலி போன்ற நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் (என்எல்சி) நிலக்கரி, லிக்னைட் எரிப்புக்கு பிறகு கிடைக்கும் சாம்பலில் அரிய மண் தாதுக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இவை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுபவை. இதற்கான பைலட் திட்டங்கள் தற்போது வெற்றிகரமாக சோதிக்கப்பட்டு வருகின்றன. அடுத்த ஓராண்டுக்குள் இது இறுதி செய்யப்பட்டு, தமிழகத்தில் வணிக ரீதியான உற்பத்தி ஆலைகள் அமைக்கப்படும். இதன்மூலம் இந்த அரிய மருந்துகளை இந்தியாவுக்கு மட்டுமன்றி உலக நாடுகளுக்கும் தமிழகத்தில் இருந்து வழங்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.