

மதுரை: திருவனந்தபுரம் - தாம்பரம் இடையிலான புதிய அம்ருத் பாரத் ரயிலை மதுரை ரயில் நிலையத்தில் கோட்ட மேலாளர் தலைமையில் அதிகாரிகள் பூக்கள் தூவி வரவேற்றனர்.
மதுரை வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் இடையேயான வாராந்திர புதிய ‘அம்ருத் பாரத்’ ரயில் சேவையை திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 22 பெட்டிகள் கொண்டு இயக்கப்படும் இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து புதன்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடைகிறது.
மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் - தாம்பரம் (16122) வியாழக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்று சேருகிறது.
இந்த ரயிலானது செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயிலில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்பட்டுள்ளது.
மதுரை ரயில் நிலையத்தில் ‘அம்ருத் பாரத்’ தொடக்க நாள் சிறப்பு ரயில் பூக்கள் தூவியும், கொடி அசைத்தும் வரவேற்கப்பட்டது.
இந்த ரயிலை வரவேற்ற மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ரயிலில் ஆய்வு செய்தார். அவருடன் முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ஆர்.சிவா முதுநிலைக் கோட்ட பொறியாளர் வி.சூரியமூர்த்தி, முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் டி. எல். கணேஷ், கூடுதல் கோட்ட மேலாளர் எல்என். ராவ் உட்பட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.