“பாஜக கூட்டணிக்கு தமிழகம் எப்போதுமே தோல்வியைத்தான் தரும்” - மோடி ட்வீட்டுக்கு ஸ்டாலின் பதிலடி!

தமிழக முதல்வர் ஸ்டாலின் | பிரதமர் மோடி

தமிழக முதல்வர் ஸ்டாலின் | பிரதமர் மோடி

Updated on
1 min read

சென்னை: “தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே. தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்” என தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தேசிய ஜனநாயக கூட்டணியின் துரோகங்களை தமிழகம் நினைத்துப் பார்க்கிறது. தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே. தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் சமக்ர ஷிக்‌ஷா (SamagraShiksha) கல்வி நிதி எப்போது வரும்?.

மக்களவைத் தொகுதி மறுவரையறையின் கீழ் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?. பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?. தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் விபி ஜிராம்ஜி கைவிடப்படும் என வாக்குறுதி எப்போது வரும்?.

பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பாஜக அரசு இழைத்து வரும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?. இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?.

ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?. கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?.

ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்?. தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பாஜக கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னதாக இதுகுறித்து பிரதமர் மோடி தமிழில் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழ்நாடு தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் இருக்கிறது. மதுராந்தகத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் பேரணியில் நான் தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்களுடன் கலந்து கொள்ள இருக்கிறேன்.

ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது என்று தமிழ்நாடு முடிவு செய்துவிட்டது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் சாதனையும் பிராந்திய பெருவிருப்பங்கள் மீதான அதன் அர்ப்பணிப்பும் மாநில மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன” எனத் தெரிவித்திருந்தார்.

<div class="paragraphs"><p>தமிழக முதல்வர் ஸ்டாலின் | பிரதமர் மோடி</p></div>
“ஊழல் திமுக அரசுக்கு விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது” - பிரதமர் மோடி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in