

புதுச்சேரி: “முதல்வர் ரங்கசாமி பாஜகவின் அடிமையாகிவிட்டார். மாநில அந்தஸ்து கேட்டு போராட திராணி கிடையாது” என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி சாடியுள்ளார்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழா வைசியால் வீதியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தல் நடைபெற்றது. மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோர் தலைமையில் கார்த்திகேயன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் வைத்திலிங்கம் எம்.பி பேசுகையில், “முதல்வர் ரங்கசாமி மாவீரன் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், மாவீரனை காணவில்லை. நாடாளுமன்றத்தை கண்டு பயப்படும் அமித்ஷாவை பார்த்து, முதல்வர் பயப்படுகிறார். இதுதான் இவர்களது நிலைப்பாடு” என்றார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி பேசும்போது, “நான் முதல்வராக இருந்தபோது, ஆளுநராக இருந்த கிரண்பேடி, முதல்வர்கள் மாநாட்டில் நான் கலந்து கொள்ள வேண்டும் என்று மத்திய உள்துறைக்கு கடிதம் அனுப்பினார். அதை நான் எதிர்த்தேன். அதையும் மீறி கிரண்பேடியை, தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அப்போது ரங்கசாமி நேரடியாகவும், முறைமுகமாகவும் கிரண்பேடிக்கு ஆதரவு கொடுத்தார். இன்று அதே நிலை ரங்கசாமிக்கு வந்துள்ளது.
மத்தியில் இப்போது பாஜக ஆட்சி. புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஆட்சி. புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர் ரங்கசாமி. ஆனால் அவர் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். மாநில அந்தஸ்துகாக கோப்புகளை நாடாளுமன்றத்தில் கொண்டுவந்து மழைக்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றி மக்களின் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டும் என்று கேட்பதற்கு முதல்வர்கள் மாநாட்டுக்கு ரங்கசாமி ஏன் செல்லவில்லை.
புதுச்சேரியில் இருந்து கொண்டு மாநில அந்தஸ்து கேட்டால் கண்டிப்பாக கிடைக்காது. இதற்காக பெரிய போராட்டத்தை நடத்த வேண்டி வரும். அதற்கான தெம்பு, திராணி ரங்கசாமிக்கு கிடையாது. அவரை மிரட்டி பாஜக காரியத்தை சாதித்து கொள்கிறது. ரங்கசாமி வீரமுள்ளவராக இருந்தால், அந்த கூட்டணியில் இருந்து வெளியே வர வேண்டும். தன்னுடைய அதிகாரத்தை பறிக்கும் கூட்டணி கட்சியுடன் அவர் இருப்பதற்கான காரணம் என்ன?
ரங்கசாமி பாஜகவின் அடிமையாகிவிட்டார். வீரமாக வெளியே பேசுவார். கடந்த 5 ஆண்டுகள் எதுவும் நடக்கவில்லை. ஊழல்தான் நடந்தது. அதே நிலைதான் இப்போதும் தொடர போகிறது” என்று அவர் தெரிவித்தார்.