

விசாரணையைப் புறக்கணித்த மனுதாரர் அயூப்கான்
கும்பகோணம்: தமிழக முதல்வர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட்ட புகார் மனுவை 8 மாதங்களாகக் கிடப்பில் போட்டு அலட்சியப்படுத்திய தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தஞ்சாவூரில் நடைபெற்ற விசாரணையைப் புறக்கணித்து மனுதாரர் வெளிநடப்பு செய்தார்.
கும்பகோணம் மேலக்காவேரியைச் சேர்ந்த மு.அயூப்கான், அப்பகுதியில் உள்ள முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலின் வக்பு சொத்து ஆவணங்களைப் பாதுகாக்கவும், தணிக்கை செய்யப்படாத வரவு, செலவு கணக்குகள் உள்ளிட்ட குறைபாடுகளைச் சரிசெய்யக் கோரியும் கடந்த 2025-ம் ஆண்டு டிச.4-ம் தேதி தமிழக முதல்வர் அலுவலகத்திற்கு புகார் மனு அனுப்பியிருந்தார்.
இம்மனு உடனடியாக நடவடிக்கைக்காக சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, இந்த ஆண்டு ஆக.3-ம் தேதி தஞ்சாவூர் வக்பு வாரிய ஆய்வாளர் அலுவலகத்திலிருந்து விசாரணைக்கு, தஞ்சாவூர் வக்பு கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆஜராகுமாறு மனுதாரர் அயூப்கானுக்கு அழைப்பாணை கடந்த ஜூலை 26-ம் தேதி அனுப்பப்பட்டது.
இதையடுத்து விசாரணைக்காக தஞ்சாவூர் அலுவலகத்திற்குச் சென்ற மனுதாரர், கடந்த 2025-ம் ஆண்டு டிச.4-ம் தேதி முதல்வர் அலுவலகத்திற்குத் தான் அனுப்பிய மனு மீதான விசாரணை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதனால், ஆத்திரமடைந்த மனுதாரர் அயூப்கான், முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பும் மனுக்கள் மீது 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசு வழிகாட்டுதல் உள்ள நிலையில், அங்கிருந்து விசாரணை நடத்த கோரி வந்த அழைப்பானை, சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகம் சென்றுள்ள நிலையில், அங்கு 8 மாதங்களாக முடக்கி வைத்தது சட்டவிரோதமானது. இது முதல்வர் அலுவலகத்தை அவமதிக்கும் செயல் என்றும் கூறி விசாரணையில் பங்கேற்க மறுத்த அயூப்கான் வெளிநடப்பு செய்தார்.
பின்னர், வக்பு நிர்வாகிகள் கடந்த 17 நாட்களாக பதில் கூறுகின்றோம் என அலைகழித்ததால் ஆத்திரமடைந்த மனுதாரர் அயூப்கான், இன்று முதல்வர் அலுவலகத்திற்கு தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அனுப்பி அளித்துள்ளார். முதல்வர் அலுவலக மனு தாமதிக்கப்பட்டதற்காக தஞ்சாவூர் அலுவலக விசாரணையைப் புறக்கணித்தது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மனுதாரர் அயூப்கான் கூறும்போது, “முதல்வர் அலுவலக மனுக்களைத் தொடர்ந்து அலட்சியப்படுத்தி வரும் தமிழ்நாடு வக்பு வாரிய தலைமைச் செயலாளர் மற்றும் வக்பு வாரியத் தலைவர் மீது முதல்வர், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தமிழ்நாடு வக்பு தலைமை அலுவலகம் முன்பாக விரைவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்றார்.
இது தொடர்பாக வக்பு வாரியத்தை சேர்ந்தவர்கள் கூறும்போது, “இந்த மனு தற்போது தான் எங்களுக்கு வந்துள்ளது. மேலும், தலைமை அலுவலகத்தில் 8 மாதங்களாக ஏன் தாமதமானது என்பது குறித்து எனக்குத் தெரியாது என்று மனுதாரர் கூறினார்” என்றனர்.