பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி
சென்னை: தமிழகத்தில் தவெக ஆட்சியமைப்பதை பாஜக தடுக்க முயல்கிறது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தைகள் கூறிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் தவெக ஆட்சியமைப்பதை தடுக்க பாஜக முயல்கிறது என்று காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் கூறிவருவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலின் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை அளிக்காத நிலையில், ஆளுநர் சட்டப்படி தன் கடமையை நிறைவேற்ற வேண்டும்.
மரபுப்படி ஆளுநர், தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வெற்றி பெற்றிருந்தால் அந்த அணிக்கு தலைமை தாங்கும் கட்சியை ஆட்சியமைக்க அழைக்கலாம். அல்லது அதிக இடங்களை பெற்ற கட்சி ஆட்சியமைக்க விருப்பம் தெரிவிக்குமேயானால், ஆதரவு தெரிவிக்கும் கட்சிகள் அல்லது வெற்றி பெற்ற உறுப்பினர்களின் ஆதரவு திருப்தி அளிக்கும் அளவுக்கு உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டிய பொறுப்பு அரசியலமைப்பு சட்டம் 164-ன் கீழ் ஆளுநருக்கு உள்ளது.
அதன் பின்னர் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே தன் ஐந்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கடிதம் மூலம் அளித்துள்ள நிலையில், வேறு எந்த கட்சியும் முன்வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவற்றையெல்லாம் குறிப்பிடாமல், வேண்டுமென்றே உள்நோக்கத்தோடு திருமாவளவனும், கம்யூனிஸ்டுகளும் பாஜகவை விமர்சனம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது.
ஐந்து ஆண்டு காலம் திராவிட மாடல் திமுக ஆட்சியில் நடைபெற்ற அவலங்களை, அக்கிரமங்களை, அராஜகங்களை, சட்டம் - ஒழுங்கு சீர்கேட்டை, பெண்களுக்கெதிரான பாலியல் குற்றங்களை, அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை, போதை பொருள் புழக்கத்தை, மது அருந்தும் பழக்கம் உச்சத்திற்கு சென்றதை கண்டு கொள்ளாமல், அமைதி காத்து, கைகட்டி, வாய்பொத்தி நின்று, தமிழகம் சீரழிந்து போனதற்கு முழு பொறுப்பேற்க வேண்டிய கம்யூனிஸ்டுகளும், காங்கிரஸும், திருமாவளவனும் இப்போது நீலிக்கண்ணீர் வடித்துக் கொண்டு, மக்கள் அளித்த தீர்ப்பை மதிக்காமல் பாஜகவை விமர்சிப்பது மலிவான அரசியல் தானே?
நேற்று வரை தவெகவை விமர்சித்ததோடு மட்டுமல்லாமல், விஜய்யை பாஜகவால் உருவானவர், பாஜகவின் 'பி' டீம் என்றெல்லாம் விமர்சித்த திருமாவளவன், ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்ற கனவில் மிதந்து கொண்டிருப்பது வெட்கக்கேடான செயல்.
ஜனநாயக ரீதியாக நடைபெற்ற தேர்தலின் முடிவை அனைவரும் மதித்து நடந்து கொள்ள வேண்டிய அதே வேளையில், அரசியலமைப்பு சட்டத்தின் படியே ஆட்சி அமைய வேண்டும்.
குதிரைப் பேரங்கள் தவிர்க்கப்பட வேண்டும், சந்தர்ப்பவாதம் முறியடிக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் உறுதி செய்ய உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின்படி ஆளுநர் முடிவெடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.