

சென்னை: அதிமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலியுறுத்தி வருவதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில், தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சி அமைக்க தவெக முயன்று வருகிறது.
இது தொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்றும் இன்றும் ஆளுநரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். மேலும், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக் கோரி கடிதமும் அளித்தார். எனினும், பெரும்பான்மை பலம் இருப்பதை உறுதிப்படுத்துமாறு ஆளுநர் விஜய்யிடம் தெரிவித்துள்ளார்.
பெரும்பான்மை பலம் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தின் மீது பரிசீலனை மேற்கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தச் சூழலில்தான், அதிமுக - திமுக கூட்டணி வியூகம் தொடர்பாக திரைமறைவு பேச்சு நடந்ததாக தகவல்கள் புதன்கிழமை இரவு பரவ ஆரம்பித்தது. அதிமுக ஆட்சியமைக்க உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்றும், திமுக வெளியில் இருந்து ஆதரவளிக்கும் என்றும் தகவல்கள் வெளியானது. ‘ஆட்சியில் நீ பாதி... நான் பாதி’ என்றெல்லாம் டீல் பேசப்பட்டதாகவும் ‘சோர்ஸ்’ தகவல்கள் தீயாய் பரவத் தொடங்கின.
இப்படி பகீர் திட்டத்தோடு திராவிட கட்சிகள் திகில் திருப்பத்துக்கு ரோடு போடுகிறார்கள் என நேஷனல் மீடியா லெவலில் இரவு முழுக்க உருட்டுகள் உலவின. இதற்கு இடையில், பதுங்குவதற்கு சிறந்த இடம் என புதுச்சேரியை செலக்ட் செய்து, பெரிய கட்சிகளோட எம்எல்ஏக்களை பேக்கப் பண்ணிட்டதாகவும் அதிரடி தகவல்கள் பரவின.
இவையெல்லாம் உருட்டுகளா அல்லது உண்மையா என்பது குறித்து இதுவரை திமுகவும் அதிமுகவும் அதிகாரபூர்வமாக வாயே திறக்கவில்லை. விஜய்யும் காங்கிரஸ் பக்கம் சாய்ந்ததால், இந்த சோர்ஸ் தகவல் நகர்வுகளையெல்லாம் சைலைன்ட் மோடில் அணுக ஆரம்பித்துவிட்டதாம் பாஜக டெல்லி மேலிடம்.
அதேவேளையில், தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காத நிலை நிலவுவதால், அரசு அமைப்பதற்கு ஆதரவு கோரி அதிமுக தரப்பு திமுகவிடம் மறைமுகமான தூதுகளை அனுப்பியதாகவும், ஆனால் அதிமுகவின் இந்த முன்மொழிவை திமுக தலைமை நிராகரித்துவிட்டதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன், எதிர்க்கட்சி வரிசையில் அமர்வதில் திமுக உறுதியாக உள்ளது என்றும் அக்கட்சி வட்டாரத்தில் இருந்து உறுதியான தகவல் வெளியானது.
இதனிடையே, அதிமுகவுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க மு.க.ஸ்டாலினை திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் வலியுறுத்தி வருவதாகக் கூறப்படுகிறது. திமுகவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பதோ அல்லது அதிமுக ஆட்சி அமைக்க திமுக வெளியில் இருந்து ஆதரவு கொடுப்பதோ அரசியல் ரீதியாக ஏற்புடையதாக இருக்காது என்பதில் ஸ்டாலின் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
எனினும், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலிக்குமாறு திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் ஸ்டாலினை வலியுறுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
“விஜய் ஒருமுறை ஆட்சி அமைத்துவிட்டால் அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு அவரை பதவியில் இருந்து அகற்றுவது கடினமாகிவிடும். அத்தகைய சூழல் உருவாவதைத் தடுப்பதற்கு, திராவிடக் கட்சிகள் ஒரு முடிவை எடுத்தாக வேண்டும்” என்று திமுக மூத்த தலைவர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரிகிறது.
திமுகவும் அதிமுகவும் இணைந்து பொதுவான குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் கூட்டாக அரசை வழிநடத்தலாம் என்பதே திமுகவுக்குள் முன்வைக்கப்படும் வாதமாக உள்ளது.
இந்தப் பின்னணியில், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், விசிக தலைவர் தொல். திருமாவளவன் ஆகியோருக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.
ஸ்டாலினின் அழைப்பை ஏற்று மூன்று தலைவர்களும் ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர். தேமுதிக தலைவர்கள் சிலரும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், மு.க.ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கையை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டம் இன்று மாலை நடைபெற உள்ள நிலையில், அந்தக் கூட்டத்தில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.