நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை: மருத்துவமனை தகவல்

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை: மருத்துவமனை தகவல்
Updated on
1 min read

சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அதிதீவிர கண்காணிப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செயற்கை சுவாசம், மருந்துகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு. 101 வயதாகும் அவர் ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு மற்றும் உணவு விழுங்க முடியாத நிலையில், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தேவையான சிகிச்சைகளை மருத்துவர்கள் அளித்து வந்த நிலையில், நேற்று அவரது உடல்நிலை முன்னேற்றத்தில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவருக்கு மருத்துவர்கள் குழுவினர் அதிதீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நல்லகண்ணு உடல்நிலை குறித்து மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘நல்லகண்ணுவுக்கு பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்களால் அதிதீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த 23-ம் தேதி அவருடைய உடல்நிலையில் ஒரு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவி சிகிச்சை மற்றும் மருந்துகள் பல்வேறு மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைப்படி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இப்போது, அவரது உடல்நிலையை பல்வேறு சிகிச்சைகள் மூலம் சீராக்க அதிதீவிர முயற்சியுடன், 24 மணிநேர தொடர் அதிதீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, நேற்று இரவு மருத்துவமனைக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்தும், அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றியும் மருத்துவமனை டீன் சாந்தாராமன், மருத்துவ கண்காணிப்பாளர் பாஸ்கரன் மற்றும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அப்போது, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, முத்துசாமி, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர்.

தொடர்ந்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்டோர் மருத்துவமனைக்குச் சென்று நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

நல்லகண்ணுவுக்கு அதிதீவிர சிகிச்சை: மருத்துவமனை தகவல்
ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மே.இ.தீவுகள் மெகா வெற்றி: 254 ரன்கள் குவித்து சாதனை | T20 WC 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in