ஜிம்பாப்வே அணிக்கு எதிராக மே.இ.தீவுகள் மெகா வெற்றி: 254 ரன்கள் குவித்து சாதனை | T20 WC 2026
மும்பை: நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்று குரூப்-1 ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை 107 ரன்களில் வீழ்த்தி மேற்கு இந்தியத் தீவுகள் அணி மெகா வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் பேட்டிங், பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
இரு முறை சாம்பியனான மேற்கு இந்தியத் தீவுகள் அணி, சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது.
இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 2-வது அணி என்ற சாதனையை மேற்கு இந்தியத் தீவுகள் படைத்தது. இந்த வகை சாதனையில் 2007-ம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையில் கென்யாவுக்கு எதிராக இலங்கை அணி 260 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளது.
டி20 உலகக் கோப்பையில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிகபட்ச ரன் குவிப்பாகவும் இது அமைந்தது. இதற்கு முன்னர் அந்த அணி 2024-ம் ஆண்டு தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 218 ரன்கள் குவித்திருந்தது.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிம்ரன் ஹெட்மயர் 34 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் விளாசி மிரளச் செய்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய ரோவ்மன் பவல் 35 பந்துகளில், 4 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 59 ரன்கள் விளாசினார்.
ஷெர்பேன் ரூதர்போர்டு 13 பந்துகளில், 31 ரன்களும் ரோமாரியோ ஷெப்பர்டு 10 பந்துகளில், 21 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 4 பந்துகளில் 13 ரன்களும் சேர்த்தனர். முன்னதாக பிரண்டன் கிங் 9, கேப்டன் ஷாய் ஹோப் 14 ரன்களில் வெளியேறினர்.
ஜிம்பாப்வே அணி தரப்பில் ரிச்சர்டு நரவா, பிளெசிங் முசாராபானி ஆகியோர் தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர். 255 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஜிம்பாப்வே அணி 10 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து தடுமாறியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
மருமானி 14, பென்னட் 5, ரியான் பர்ல் 0, டியான் மேயர்ஸ் 28, கேப்டன் ராஸா 27, முசேக்வியா 0, முன்யோங்கா 14, கிரேம் க்ரீமர் 0, முசாராபானி 0, எவான்ஸ் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். 17.4 ஓவர்களில் 147 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது ஜிம்பாப்வே அணி. இதன் மூலம் 107 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. அதோடு அந்த அணியின் நெட் ரன் ரேட் +5.350 என உள்ளது. இது இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் உள்ளது. ஏனெனில் இந்த பிரிவில் உள்ள அணிகளில் சில தலா 4 புள்ளிகளை பெற வாய்ப்புள்ளது. அப்போது ரன் ரேட் அடிப்படையில் முன்னிலை வகிக்கும் அணிகளே அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
மேற்கு இந்தியத் தீவுகள் தரப்பில் 4 ஓவர்களில் வீசிய மோட்டி, 28 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை கைப்பற்றினார். ஹுசைன் 3, மேத்யூ 2, ஹோல்டர் 1 விக்கெட் கைப்பற்றினர். ஆட்ட நாயகன் விருதை ஹெட்மயர் வென்றார்.
ஷிம்ரன் ஹெட்மயர் சாதனை: டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிம்ரன் ஹெட்மயர் 34 பந்துகளில், 85 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். முன்னதாக அவர், தனது 8-வது அரை சதத்தை 19 பந்துகளில், 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் விளாசினார்.
இதன் மூலம் அவர், டி20 உலகக் கோப்பை வரலாற்றில் மேற்கு இந்தியத்தீவுகள் அணிக்காக குறைந்த பந்துகளில் அரை சதம் அடித்திருந்த தனது முந்தைய சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் அவர், நடப்பு உலகக் கோப்பை தொடரின் லீக் சுற்றில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ஸ்காட்லாந்துக்கு எதிராக நடைபெற்ற ஆட்டத்தில் 22 பந்துகளில் அரை சதம் அடித்திருந்தார்.
