

நயினார் நாகேந்திரன்
சென்னை: “தனியார் நிறுவனங்களிடம் அதிகரிக்கும் பால் கொள்முதலை அரசுக்கானதாக்கி, செலவினங்களைக் குறைத்து பால் உற்பத்தியைப் பெருக்க திறனில்லாத முதல்வர் விஜய் நிர்வாகத் தோல்விக்கு, தமிழக மக்களின் ஆரோக்கியம் பாழாவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழகத்தின் பல முக்கியப் பகுதிகளில் ஆவின் நிறுவனத்தின் தினசரி பால் விநியோகம் 30% குறைந்துள்ளதாகவும், குறிப்பாக தலைநகர் சென்னையில் கடந்த ஏப்ரல் மாதத்தின்போது சுமார் 16 லட்சம் லிட்டராக இருந்த ஆவின் பாலின் தினசரி விநியோகம், தற்போது 13.5 லட்சம் லிட்டராகக் குறைந்துள்ளதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கின்றன. முந்தைய ஸ்டாலின் அரசும் சரி, தற்போதைய விஜய் அரசும் சரி, ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் அடிப்படைத் தேவையிலேயே கைவைப்பது கடும் கண்டனத்துக்குரியது.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு அதிக உற்பத்தி செலவின் காரணமாக ஆவின் கிரீன் மேஜிக் பால் பாக்கெட்டுகளின் உற்பத்தியை அரசு படிப்படியாகக் குறைத்து வருகிறது என்பதை நாம் சுட்டிக்காட்டியபோது, கொதித்தெழுந்து அரசுக்கு வக்காலத்து வாங்கியவர்கள் தற்போது இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? தனியார் நிறுவனங்களிடம் அதிகரிக்கும் பால் கொள்முதலை அரசுக்கானதாக்கி, செலவினங்களைக் குறைத்து பால் உற்பத்தியைப் பெருக்க திறனில்லாத முதல்வர் விஜய் நிர்வாகத் தோல்விக்கு, தமிழக மக்களின் ஆரோக்கியம் பாழாவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
எனவே, அரசு பால் நிறுவனத்தை எப்படி திறம்பட கையாள வேண்டும் என்பது குறித்த அடிப்படை நிர்வாகம் தெரியவில்லை என்றால், அமுல் உள்ளிட்ட அரசு பால் நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் பிற மாநில அரசுகளிடம் ஆலோசனைகள் கேட்டு தெரிந்துகொண்டு, தமிழகத்தில் தங்கு தடையின்றி ஆவின் பால் விநியோகம் நடப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக முதல்வர் விஜய்யை வலியுறுத்துகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.