

மதுரை: பிரதமர் மோடி மதுரைக்கு வருவதற்கு முன்பாக, திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
மதுரையில் வரும் 28-ம் தேதி பிரதமர் மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற மண்டேலா நகர் பகுதியில் இக்கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அங்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி.உதயகுமார், வி.வி.ராஜன் செல்லப்பா, பாஜக மாநில நிர்வாகிகள் ராம.சீனிவாசன், கருப்பு முருகானந்தம், ஏ.பி.முருகானந்தம், பொன்.பாலகணபதி, சசிகலா புஷ்பா உள்ளிட்டோர் நேற்று பார்வையிட்டனர்.
பின்னர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த தேர்தலில் ஒரு செங்கல்லை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனை கட்டவில்லை என உதயநிதி பிரச்சாரம் செய்தார். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கம்பீரமாக வளர்ந்து நிற்கிறது.
அதை நினைவுபடுத்தும் வகையில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் முடிந்த பிறகு, திறப்பு விழா குறித்து முடிவு செய்யப்படும்.
பிரதமர் மோடி மதுரை வருவதற்கு முன்பாக திருப்பரங்குன்றத்தில் தீபத் தூணில் தீபம் ஏற்றி, நீதிமன்றத் தீர்ப்பை அரசு நிறைவேற்ற வேண்டும். அடுத்து ஆட்சிக்கு வர முடியாது என்ற நிலையில், அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பழனிசாமி முதல்வராக இருந்தபோது தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை கொண்டு வந்தார். ஸ்டாலின் ஒரு மருத்துவக் கல்லூரியையாவது கொண்டு வந்தாரா? கேட்டால் டப்பா இன்ஜின் என்கிறார்கள்.
தமிழகத்தில் நடைபெறுவது கஞ்சா இன்ஜினா? விஜய்யுடன் கூட்டணி சேர முடியாமல் போனதால்தான் திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடிக்கிறது. திமுக கூட்டணி பொருந்தாக் கூட்டணி. எங்கள் கூட்டணி பொருந்தும் கூட்டணி. அதிமுகவை விமர்சிக்க விஜய்க்கு தகுதி இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.