அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சுணக்கம் ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சுணக்கம் ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
Updated on
1 min read

சென்னை: அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் சுணக்கம் ஏன்? என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ்தளப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்று 2 மாதங்கள் கடந்த நிலையிலும் கூட அரசு வழக்கறிஞர்களின் நியமனங்களுக்கான அரசாணை இன்னும் முழுமையாக வெளியிடப்படவில்லை.

இதனால் ஜாமீன், முன்ஜாமீன் உள்ளிட்ட மனுக்களின் மீதான விசாரணைகள் தடைபடுவதாகவும், பெரும்பாலான கீழமை நீதிமன்றங்களில் நூற்றுக்கணக்கான வழக்குகள் தேக்கமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள், தவெக அரசின் நிர்வாகக் குளறுபடிகளுக்கான மற்றொரு சான்று.

அதிலும் குறிப்பாக, ‘அரசு வழக்கறிஞர்களுக்கான அரசாணையை நாங்கள் தற்போதுதான் வெளியிட ஆரம்பித்துள்ளோம்’ என சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பொதுவெளியில் பகிரங்கமாக ஒப்புக்கொண்டது பல்வேறு சந்தேகங்களையும் குழப்பங்களையும் எழுப்புகிறது.

அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் சுணக்கம் ஏற்பட்டதன் பின்னணி என்ன? புதிய அரசு வழக்கறிஞர்களின் நியமனம் தாமதமாகிறது என தெரிந்த பின்பும்கூட, ஏற்கெனவே பணியில் இருந்த அரசு வழக்கறிஞர்களுக்கு கால நீட்டிப்பு வழங்காதது ஏன்?

முதல்வரின் தார்மீக கடமை

தமிழகத்தின் அரசு இயந்திரத்தையே சிக்கலுக்குள் தள்ளும் இந்த விவகாரத்தை ஆளும் அரசு எதற்கு இத்தனை அலட்சியமாகக் கையாள்கிறது? என்பன உள்ளிட்ட மக்களின் பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியது முதல்வரின் தார்மீகக் கடமை.

அதுமட்டுமன்றி, அரசு வழக்கறிஞர்களை மட்டுமே நம்பியிருக்கும் ஏழை, எளிய மக்களின் சட்டப் பாதுகாப்புக்கும் முதல்வர்தான் முதல் பொறுப்பு. எனவே, அரசு வழக்கறிஞர்களின் நியமனத்தில் உள்ள தடைகளை ஆராய்ந்து, எவ்வித சமரசமுமின்றி உடனடியாக வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் சுணக்கம் ஏன்? - நயினார் நாகேந்திரன் கேள்வி
கூட்டுறவு பயிர் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி சென்னையில் 20-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பேரணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in