“பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதல்வர் விஜய் ‘சாரி’யாவது சொல்வாரா?” - கனிமொழி எம்.பி

காவல் நிலையத்தில் உயிரிழந்தவரின் உறவினர்களுக்கு நேரில் ஆறுதல்
“பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம்  முதல்வர் விஜய் ‘சாரி’யாவது சொல்வாரா?” - கனிமொழி எம்.பி
Updated on: 
1 min read

மதுரை: காவல் நிலையத்தில் உயிரிழந்த ஒட்டுநரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறிய கனிமொழி எம்,பி, ”முதல்வர் விஜய், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு குறைந்தப்பட்சம் ‘சாரி’யாவது சொல்வாரா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

தேனி மாவட்டம், தேவாரம் அருகேயுள்ள அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் ஆர்.பாலகிருஷ்ணன் (42). இவர், கடந்த நவ.3-ம் தேதி மதுரை மாவட்டம், வாலாந்தூர் பகுதியில் ஏலக்காய் ஏற்றிச் சென்ற லாரி தீப்பிடித்த சம்பவம் தொடர்பான விசாரணைக்காக நவ.13-ம் தேதி செக்கானூரணி காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவர், நவ.14ஆம் தேதி அதிகாலை காவல் நிலையத்திலேயே அவர் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

அவரை போலீஸார் விசாரணை என்ற பெயரில் அடித்து கொன்றதாக குடும்பத்தினர், உறவினர்கள் குற்றம்சாட்டி அவரது உடலை வாங்க மறுத்து மதுரை அரசு மருத்துமனை முன்பு 4 நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், உயிரிழந்த செக்கானூரணி காவல் நிலையத்தையும் பாலகிருஷ்ணன் உறவினர்கள் முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர்.

பின்னர், அவரது உடலை கடந்த 18-ம் தேதி அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ஐஜி விஜேந்திரபிதாரி, இன்ஸ்பெக்டர் முத்து, காவலர்கள் பழநிவேல் ராஜன், கலைசெல்வி ஆகியோர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மதுரை வந்த திமுக எம்.பி கனிமொழி, ஒட்டுநர் பாலகிருஷ்ணனின் மனைவி மற்றும் குடும்பத்தினரை, நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மதுரை பரவையில் உள்ள பாலகிருஷ்ணனின் உறவினர்கள் இல்லத்தில் வைத்து, பாலகிருஷ்ணன் மனைவி, மகன் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை, கனிமொழி எம்.பி. நேரில் சந்தித்து, உயிரிழப்பு தொடர்பான விவரங்களைக் கேட்டறிந்தார். மேலும், இச்சம்பவம் தொடர்பாக குடும்பத்தினர் முன்வைத்துள்ள கோரிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.

பாலகிருஷ்ணனின் மறைவால் துயரத்தில் ஆழ்ந்துள்ள குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து கனிமொழி எம்பி தனது எக்ஸ் தள பக்கத்தில், “மதுரை - செக்கானூரணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த பாலகிருஷ்ணனின் குடும்பத்தினரை, மதுரையில் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன்.

முந்தைய ஆட்சியில் “சாரி வேண்டாம், நீதி வேண்டும்” என்று கூச்சலிட்ட முதல்வர் விஜய், தனது காவல்துறையால் தற்போது நிகழ்ந்துள்ள இந்தக் காவல் மரணம் குறித்து எப்போது வாய்த் திறக்கப் போகிறார்? பாதிக்கப்பட்ட இந்தக் குடும்பத்தினரிடம் குறைந்தபட்சம் சாரியாவது சொல்வாரா?

இந்தச் சம்பவம் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டு, உண்மை வெளிக்கொணரப்பட வேண்டும். இச்சம்பவத்துக்கு பொறுப்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நீதி கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.

“பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம்  முதல்வர் விஜய் ‘சாரி’யாவது சொல்வாரா?” - கனிமொழி எம்.பி
“இந்தியா மீதான பார்வையை மாற்றுங்கள்” - ஜப்பான் நிறுவனங்களுக்கு ஜெய்சங்கர் வலியுறுத்தல்

X