

சென்னை: தமிழக மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தவும், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும் தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகிஉள்ளது.
சென்னை, அண்ணா சாலையில் உள்ள மின்சார வாரிய தலைமையகத்தில், தமிழகத்தின் மின்கட்டமைப்பை தொழில்நுட்ப ரீதியாக வலுப்படுத்தவும், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவும் மின்சார வாரியம் மற்றும் சென்னை ஐஐடி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தாகியுள்ளது.
எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. தமிழக மின்சார வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன், சென்னை ஐஐடியின் தொழில்துறை ஆலோசனை மற்றும் நிதியுதவி ஆராய்ச்சியின் தலைவர் மனு சந்தானம் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மாநிலத்தின் மின் துறையை உலகத் தரத்துக்கு நவீனமயமாக்கும் நோக்கில் இந்த நீடித்த கூட்டாண்மை உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவு பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் தரவுவழி சார்ந்து முடிவெடுக்க முடியும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை மேம்படுத்தவும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை உருவாக்கவும் முடியும்.
தொழில்நுட்ப ஆய்வுகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஊக்குவிக்கவும் செலவினங்களைக் குறைக்கவும், மின்சார வாரிய அதிகாரிகள் மற்றும் பொறியாளர்களுக்கு ஐஐடி பேராசிரியர்கள் மூலம் சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்படும்.
இதன் மூலம் மின் உற்பத்தி, மின் பரிமாற்றம், மின் பகிர்மானம் மற்றும் பசுமை எரிசக்தித் துறைகளில் புதிய தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு, தமிழக மக்களுக்கு தடையற்ற மற்றும் நம்பகமான மின் விநியோகம் வழங்க வழிவகை ஏற்படும்.
முன்னதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், ``செயற்கை நுண்ணறிவு மூலம் மின்கட்டமைப்பைக் கண்காணிப்பது, அனல்மின் நிலையங்களின் செயல்திறனை உயர்த்துவது, பசுமை ஆற்றல் மற்றும் பேட்டரி சேமிப்புக் கொள்கைகளை வகுப்பது போன்றவற்றில் ஐஐடி தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கும்.
இதன் மூலம் பொதுமக்களுக்குத் தடையற்ற மின் விநியோகம் உறுதி செய்யப்படும். ஸ்மார்ட் மீட்டர் திட்டம் குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மின்துறை ஆள் பற்றாக்குறையைப் போக்க டிஎன்பிஎஸ்சி வழியாக இந்த ஆண்டே 15,000 பணியாளர்களும், 5000 கேங்மேன்களும் விரைந்து நியமிக்கப்பட உள்ளனர்.
தற்காலிகமாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் மூலம் பழுதுகள் சரிசெய்யப்பட்டு வருகின்றன. ஒப்பந்த ஊழியர்களின் ஊதியம், இஎஸ்ஐ, பிஎஃப் விவரங்கள் முறைப்படுத்தப்பட்டு கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன'' என்றார்.
சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி கூறுகையில், ``மின் உற்பத்தி மற்றும் தேவைகளுக்கு இடையேயான இடைவெளியைக் குறைக்க புதிய தொழில்நுட்பங்கள் அவசியம். இதற்காக மின்சார வாரியத் தலைமையகத்திலும், ஐஐடியிலும் கூட்டு ஆராய்ச்சி அலுவலகங்கள் அமைக்கப்படும்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் சென்சார்கள் மூலம், மின்கட்டமைப்பில் பழுது ஏற்படும் இடம் முன்கணிப்பு செய்யப்படும். பேரிடர் காலங்களில் மின்கட்டமைப்பைப் பாதுகாப்பது, சைபர் தாக்குதல்களைத் தடுப்பது மற்றும் ஸ்மார்ட் மீட்டர்களின் தரத்தை மதிப்பீடு செய்வது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
ஐஐடி ரிசர்ச் பார்க்கில் ஆய்வு செய்யப்பட்ட `1 மெகாவாட்' பேட்டரி சேமிப்புத் தொழில்நுட்பத்தை மின்சார வாரியத்தில் பெரிய அளவில் அமல்படுத்த ஆலோசிக்கப்படும். இந்த நவீன உள்கட்டமைப்புத் திட்டத்துக்காக ஐஐடியின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் களமிறங்க உள்ளனர்'' என்றார்.