

மாணிக்கம் தாகூர்
சென்னை: ‘ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்ட மோடி அரசின் பிற்படுத்தப்பட்டோர் விரோத முகமூடி மீண்டும் கிழிந்துவிட்டது’ என தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘11 மார்ச் 2026 அன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை (UoI v. Rohith Nathan) முடக்க, மறுஆய்வு / விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள மோடி அரசு, சமூக நீதியை சீர்குலைத்து ஓபிசி இளைஞர்களுக்கு வெளிப்படையான துரோகம் இழைக்கிறது.
உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது: 1993 ஓஎம் விதிகளின்படி கிரீமிலேயர் கணக்கீட்டில் பெற்றோரின் ஊதியம் சேர்க்கப்படக் கூடாது; DoPT-யின் 2004-ஆம் ஆண்டு கடிதத்தின்படி பொதுத்துறை/தனியார் ஊழியர்களின் பிள்ளைகளுக்கு எதிரான சட்டவிரோத பாகுபாடாகும்.
பாதிக்கப்பட்ட தகுதியான தேர்வர்களுக்கு கூடுதல் பணியிடங்களை உருவாக்கி, 6 மாத காலத்திற்குள் தீர்ப்பை அமல்படுத்த வேண்டும். ஆனால், மோடி அரசோ இத்தீர்ப்பை அமல்படுத்தாமல் நழுவ சிறப்பு அமர்வை நாடுகிறது.
ஒன்றிய அரசுக்கு எங்களின் கோரிக்கைகள்:
1. மறுஆய்வு மனுவை உடனடியாகத் திரும்பப் பெற்று, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி கூடுதல் பணியிடங்கள் மூலம் நிலுவையில் உள்ள தேர்வர்களுக்கு உடனே பணி ஒதுக்கீடு செய்க.
2. சாக்குப்போக்குகள் கூறாமல், உச்ச நீதிமன்றம் விதித்த 6 மாத காலக்கெடுவை முழுமையாகப் பின்பற்றுக.
3. இத்தீர்ப்புக்கு முன் ஓபிசி பிரிவில் விண்ணப்பிக்க முடியாமல் பொதுப் பிரிவில் தள்ளப்பட்ட தேர்வர்களுக்கு யுபிஎஸ்சி, சிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து தேர்வுகளிலும் கூடுதல் வாய்ப்புகளை வழங்குக.
4. ஏழை எளிய ஓபிசி மாணவர்களுக்கும் இடபிள்யூஎஸ் போன்ற பொருளாதார ரீதியிலான சலுகைகளை விரிவுபடுத்துக.
5. செல்லுபடியாகும் ஓபிசி-என்சிஎல் சான்றிதழ்களை அடிப்படையாகக் கொண்டு பாதிக்கப்பட்ட மாணவர்களின் பணி / சேர்க்கை நிலையை உயர்த்துக.
6. மாநில வருவாய்த் துறையால் வழங்கப்பட்ட ஓபிசி-என்சிஎல் சான்றிதழ்களை நிராகரிப்பது மாநிலங்களின் கூட்டாட்சி அதிகாரத்தை அவமதிக்கும் செயலாகும்; சான்றிதழ்களை ஏற்றுக்கொண்டு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
மாநிலங்களின் சுயாட்சியையும், இந்தியா முழுவதும் உள்ள ஓபிசி மாணவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளையும் பாதுகாக்க அனைத்து எதிர்க்கட்சி ஆளும் மாநில அரசுகளும் இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.