

மேட்டூர் அணை வலது கரையில் எஸ்பி குத்தாலிங்கம் நேரில் ஆய்வு
சேலம்: மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பதற்கு தமிழக முதல்வர் விஜய் மேட்டூர் வந்து செல்லும் வகையில் முன்னேற்பாடுகள் திட்டமிடப்பட்டு வருகின்றன.
மேட்டூர் அணையிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ம் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது வழக்கம். இதன் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் 17 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்நிலையில், நடப்பாண்டில் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால், ஜூன் 12-ம் தேதி பாசனத்துக்கு நீர் திறக்க முடியவில்லை. இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து திறக்கப்படும் உபரிநீரால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து சற்று அதிகரித்து, அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 88.21 அடியைக் கடந்து, விரைவில் நீர் மட்டம் 90 அடியை எட்டும் நிலையில் உள்ளது.
இந்நிலையில், சட்டப்பேரவையில் மேட்டூர் அணை எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளித்த, நீர் வளத்துறை அமைச்சர் என்.ஆனந்த், விரைவில் நல்ல செய்தி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
தற்போது மேட்டூர் அணை நீர் மட்டம் உயர்ந்து வரும் நிலையில், நீதிமன்ற உத்தரவால் கர்நாடகா அணைகளில் இருந்து தமிழகத்துக்கு உரிய நீர் திறக்கப்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
எனவே, மேட்டூர் அணையில் இருந்து அடுத்த சில நாட்களில் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும் என்று தகவல் வெளியாகிறது.
குறிப்பாக, தமிழக முதல்வர் விஜய், மேட்டூர் வந்து, அணையில் இருந்து டெல்டாவுக்கு நீரை திறந்து வைப்பார் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, டெல்டாவுக்கு நீர் திறக்கப்படும் விழாவுக்கு, மேட்டூர் அணையின் வலது கரையில் மேடை அமைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு மேடை அமைக்கப்படும் இடம், நீர் திறப்புக்காக மேல்மட்ட மதகில் மின் விசையை இயக்கும் இடம் ஆகியவற்றை சேலம் எஸ்.பி. குத்தாலிங்கம் தலைமையில் போலீஸார் இன்று பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின் போது நீர்வளத் துறை செயற்பொறியாளர் செல்வராஜ், உதவி பொறியாளர்கள் சதிஷ், பிரசாந்த், டிஎஸ்பி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். இதேபோல், சேலத்தில் இருந்து மேட்டூர் வந்து செல்லக்கூடிய சாலைகளையும் போலீஸார் ஆய்வு செய்தனர்.