

சென்னை: தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி உள்பட 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அக்.15-ம் தேதி மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மையத்தின் உயரதிகாரியும், விஞ்ஞானியுமான வி.ஆர்.துரை ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக, சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென் தமிழக கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதுதவிர, லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 14 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் ஞாயிற்றுக்கிழமை (அக்.11) மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அக்.12-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, மதுரை, சிவகங்கை, சேலம், திருப்பூர் ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அக்.13-ம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்.14-ம் தேதி ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, தேனி, கன்னியாகுமரி, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மழை பெய்யக்கூடும். வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும்.
அக்.15-ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கரூர், சேலம், நாமக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 23 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அக்16-ம் தேதி திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அக்.17-ம் தேதி கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. திங்கள்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.