

சென்னை: மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமருக்கு முதல்வர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
முன்னதாக, இன்று (அக்.11) காலை பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடியும், தமிழக முதல்வர் விஜய்யும் ஒன்றாக இணைந்து கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து மெட்ரோ ரயிலிலும் பயணித்தனர்.
பின்னர் கிண்டியில் சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் பிரதமர், முதல்வர் தரிசனம் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஐஐடி வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது.
தொடர்ந்து பிரதமர் மோடி, ரூ.13 ஆயிரம் கோடிக்கும் அதிகமான மதிப்பில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
பிரதமரை வரவேற்று முதல்வர் விஜய் பேசுகையில், “பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடிக்கு நன்றி. தமிழ்நாடு பல தொன்மையான பண்பாட்டை உயிர்ப்புடன் வைத்திருக்கும் மாநிலம். அப்படிப்பட்ட தமிழ்நாட்டின் சார்ப்பில், தமிழக மக்களின் சார்பில் நான் பிரதமர் மோடியை வரவேற்கின்றேன்.
தமிழகத்தில் நமது அரசு அனைவருக்குமான அரசாக உள்ளது. கல்வி, வேளாண்மை என ஒட்டுமொத்த தமிழக நலனை இலக்காகக் கொண்டு அனைத்து தரப்பினருக்கான அரசாக நமது அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 100 நாட்களுக்கும் மேல் ஆட்சியை நடத்தியிருக்கிறோம். ஊழலற்ற தமிழகத்தை உருவாக்க கடும் சிரத்தையுடன் செயல்பட்டு வருகிறோம்.
இந்தியாவின் முன்னேற்றத்திற்கு தமிழகம் என்றைக்கும் துணையாக நிற்கும். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து செயல்படும்போது அதன் பலன் நேரடியாக மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிக்க வேண்டும் என்பதே நமது அணுகுமுறை.
சென்னையின் வளர்ச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் அதன் வளர்ச்சியைக் கொண்டு சேர்க்க வேண்டும். அதனால், சென்னை மெட்ரோ 3-ம் கட்ட திட்டம், ஓசூர் - பெங்களூரு திட்டம், கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மறுபரிசீலனை செய்து ஒப்புதல் தர வேண்டுகிறேன்.
அதேபோல், சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும்.” என்று வலியுறுத்தினார்.