

படம் ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: “தமிழக முதல்வர் ஸ்டாலினை மோடியும், அமித் ஷாவும் மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது” என்று திருச்சியில் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, “டெல்லியில் தமிழக மக்களின் சிப்பாயாக செயல்படுவேன்” என்றும் உருக்கமாக கூறினார்.
திருச்சி துறையூரில் காங்கிரஸ் வேட்பாளர் லெனின் பிரசாத், திமுக வேட்பாளர்கள் அமைச்சர் கே.என்.நேரு, கதிரவன், கருணைராஜா, சேலம் ஆத்தூர் வேட்பாளர் அர்த்தநாரி ஆகியோரை ஆதரித்து தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார்.
அப்போது அவர், “தமிழகத்தில் நடைபெறும் இந்தத் தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல. அடிப்படையில் மிக வித்தியாசமான தேர்தல். பாஜக அரசு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அகற்றிவிட்டு, ஒரு பொம்மை முதல்வரை அமர வைக்க முயற்சிக்கிறது.
அதிமுக ஒரு சிறந்த கட்சியாக இருந்தது. ஆனால் தற்போது அந்த நிலை மாறிபோய் பாஜகவின் முகமூடியாக மாறி விட்டது.
தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, கலாச்சாரத்தை அழிக்க பாஜக தமிழ்நாட்டிற்குள் நுழையப் பார்க்கிறது. தமிழ் என்பது ஒரு தொன்மையான மொழி மட்டுமல்ல. அது தமிழர்களின் ஆன்மா. தமிழ் மக்களின் வீரத்தை குறைத்து மதிப்பிடக் கூடாது. அதனால்தான் பாஜக, அதிமுகவின் ஆன்மாவை கையில் பிடித்துள்ளனர்.
படம் ர.செல்வமுத்துகுமார்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை மிரட்டவோ, பணிய வைக்கவோ முடியாது என்று பாஜகவுக்கு நன்றாக தெரியும்.
மகளிர் மசோதாவை பயன்படுத்தி தொகுதி மறுவரையறையை கொண்டு வரப் பார்த்தனர். இதன்மூலம் தமிழ்நாடு உட்பட தென்னிந்திய மாநிலங்கள், வட கிழக்கு மாநிலங்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்கக் கூடாது என்று நினைத்தனர்.
காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து அதை தோல்வி அடையச் செய்துள்ளோம் என்பது மிக பெருமையாக உள்ளது.
பாஜகவினர் மதங்களால், சாதிகளால், மொழியால் மக்களைப் பிரித்து இந்தியாயை துண்டாட பார்க்கிறார்கள். நாட்டின் ஸ்திரத்தன்மையை சிதைக்கப் பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டின் பாதை சமூக நீதி, சமத்துவ பாதை. அதை பாஜக விரும்பவில்லை. எனவே அதை சிதைக்கப் பார்க்கிறார்கள்.
தமிழ்நாட்டில் சமூக நீதி காக்கப்படுகிறது. பெண்கள் முன்னேற்றம் உள்ளது. சமூக நீதி காப்பது குறித்து மற்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும்.
மக்களவையில் பிரதமர் மோடியால் எங்களை நேருக்கு நேராக சந்திக்க முடியவில்லை. அவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கட்டுப்பாட்டில் உள்ளார். ட்ரம்ப் கூறுவதை உடனடியாக மோடி செய்கிறார். ட்ரம்ப்புக்கு அவர் பணிந்து இருப்பது போல எடப்பாடி பழனிசாமியை தனக்கு பணிந்து இருக்க வைக்கிறார்.
படம் ர.செல்வமுத்துகுமார்
நம்முடைய விவசாயம் உள்ளிட்ட தொழில்கள், தரவுகள் உள்ளிட்ட அனைத்தையும் மோடி அமெரிக்காவுக்கு விற்று வருகிறார். எஃப்ஸ்டீன் கோப்புகள் மூலம் மோடியை ட்ரம்ப் மிரட்டி வருகிறார்.
மோடியும், அமித் ஷாவும் தமிழக முதல்வரை மிரட்டலாம் என்று கனவு காண்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது. அவர்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.
தமிழ் கலாச்சாரத்தை, பண்பாட்டை அழிக்க நாம் ஒரு போதும் அவர்களை இங்கு அனுமதிக்க முடியாது. பாஜக - ஆர்எஸ்எஸ் ஒருபோதும் தமிழகத்தில் நுழைய முடியாது.
தமிழ்நாட்டுக்கும் எனக்கும் உள்ள உறவை அவர்களால் ஒருபோதும் குலைக்க முடியாது. இது வெறும் அரசியல் உறவு அல்ல. இது அன்பின் உறவு. எனது பாட்டி இந்திரா காந்தி, தந்தை ராஜீவ் காந்தியுடன் என்னையும் தொடரும் பாசப் பிணைப்பு.
நான் உங்களது (தமிழகத்தின்) சிப்பாயாக டெல்லியில் செயல்படுவேன். தமிழ்நாட்டுக்காகவும், தமிழக மக்களுக்காகவும் குரல் கொடுப்பேன். நீங்கள் சொல்வதை நான் செய்து முடிப்பேன்” என்று பேசினார்.
முன்னதாக, அவரை தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் கே.வி.தங்கபாலு வரவேற்றார். காங்கிரஸ் தமிழக தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், முக்கிய நிர்வாகிகள் உத்தம்குமார் ரெட்டி, கிறிஸ்டோபர் திலக், விஜய் சிங் உட்பட பலர் பங்கேற்றனர். திமுக பெரம்பலூர் எம்பி அருண்நேரு நன்றி கூறினார்.