

திண்டுக்கல் சீனிவாசன் |கோப்புப் படம்
திருச்சி: பிரதமர் நரேந்திர மோடி பிரச்சாரத்துக்காக தமிழகம் வரும்போது, மேடையில் அவருடன் யார் யார் இருப்பார்கள் என்பது அப்போதுதான் தெரியும். அதிசயங்கள் நடக்கும் என்று திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திமுகவின் இடைக்கால பட்ஜெட் என்பது வெங்காயத்தை உரித்தால் எப்படி இருக்குமோ அதுபோல ஒன்றும் இருக்காது.
திமுகவின் எதிர்ப்பு மற்றும் எங்களது கூட்டணியின் பலம் பற்றியும் எடுத்துரைத்து தேர்தலை சந்திப்போம். வைகோ அப்பிராணி. அவர் பாவம். வயது முதிர்ந்தவர். அவரை பற்றி எதுவும் பேச விரும்பவில்லை. தேர்தலுக்குப் பிறகுதான் விஜயின் சக்தி என்ன என்பது தெரியவரும். விஜய் என்ன மனநிலையில் இருக்கிறார் என்பது தெரியவில்லை. தேர்தல் பரபரப்பில் அனைவரும் இருக்கும் நிலையில் அமெரிக்க மாடலில் மக்களை சந்திக்காமல் டிவியில் பிரச்சாரம் செய்யப் போகிறார் போல.
அங்கெல்லாம் இதுபோலதான் செய்கிறார்கள். என்ன ஐடியாவில் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஐந்தாயிரம் ரூபாய் வழங்குவது என்பது நமது பணத்தை தான் அவர்கள் தருகிறார்கள். இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். விலைவாசி உயர்வு மின்சார உயர்வு என அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. இந்த ஆட்சி தொடர்ந்தால் சரி இருக்காது என மக்கள் எண்ணுகிறார்கள்.
‘ஸ்டாலின் தொடரட்டும் தமிழகம் வெல்லட்டும்’ என்ற திமுகவின் பிரச்சாரம் போல ‘எடப்பாடி வெல்லட்டும் தமிழக முன்னேறட்டும்’ என்ற பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுப்போம், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் காந்தி என்ன சொல்கிறாரோ அதுதான் முடிவு. தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது சரியாக வராது என்று திமுக தலைவரும், அதிமுக பொதுச் செயலாளரும் சொல்லிவிட்டார்கள்.
பாஜக, அதிக சீட்டுகள் கேட்பது குறித்து இன்னும் பேசவில்லை. பேசிக்கொண்டே இருக்கிறார்கள். தேர்தல் அறிவிக்க இன்னும் நாட்கள் உள்ளன. பிரதமர் வருவது என்பது பிரச்சாரத்திற்காக. மேடையில் அவர் ஏறும்போது தான் யார் இருப்பார்கள் என்று தெரியும். அதிசயங்கள் நடக்கும்’’ என தெரிவித்தார்.
சசிகலாவுக்கு ஆதரவு?: அதிமுக முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தெரிகிறது; அப்படி கட்சி ஆரம்பித்தால் அவர்களுக்கு ஆதரவளிப்பீர்களா? என்ற கேள்விக்கு ‘‘அவர் கட்சி அறிவிப்பாரா என்பது தெரியாது. அவர் ஆரம்பித்த பிறகு நீங்கள் கேட்கிற கேள்விக்கு பதில் கூறலாம்’’ என்றார்.
மேலும், தேமுதிக, திமுக கூட்டணியில் இணைந்தது குறித்த கேள்விக்கு, ‘‘அவர்களே கூறி விட்டார்கள். யாரிடமும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. எங்கே போக வேண்டுமோ, போவோம் என்றார்கள். போய்விட்டார்கள்’’ என்றார்.