

முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டிய நிகழ்வில் உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் நடனமாடிய வீடியோ விமர்சனங்களுடன் வைரலான நிலையில், அது குறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.
மதுரை மாவட்டம், மேலூரில் தமிழக முதல்வர் விஜய் மற்றும் மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் பிறந்தநாளையொட்டி ‘போதையில்லாத மேலூர், பெண்கள் பாதுகாப்பு’ என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கு தவெக, காங்கிரஸ் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
மேலூர் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலிருந்து மாரத்தான் போட்டியை தொடங்கியது. 4 பிரிவுகளாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவுக்காக நடந்த இந்தப் போட்டியை உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, கருப்பு டி-ஷர்ட் அணிந்து அமைச்சர் விஸ்வநாதன் விழா மேடைக்கு வந்தார். அங்கு திரண்டு இருந்த தவெகவினர், முதல்வர் விஜய் நடித்த ‘சச்சின்’ என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ‘வாடி வாடி கைப்படாத சிடி’ எனும் பாடலுக்கு உற்சாகமாக நடனமாடினர். இதைப் பார்த்த அமைச்சரும் மேடையிலேயே தவெக பெண் நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் உற்சாகமாக குத்தாட்டம் போட்டார்.
இதை தவெக, காங்கிரஸ் கட்சியினரும் வீடியோ எடுத்து வாட்ஸ்-அப், சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். தமிழக உயர் கல்விக்கு பொறுப்பான ஓர் அமைச்சரே முதல்வரின் பாடலுக்கு தவெகவினருடன் இணைந்து குத்தாட்டம் போட்டது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
இது சர்ச்சையான நிலையில், “முதல்வர் விஜய் பிறந்த நாளையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், அங்கு இருந்த இளைஞர்கள் தங்களுடன் சேர்ந்து நடனமாட அழைத்தனர். அவர்களின் கோரிக்கைக்கு மதிப்பளித்து நடனம் ஆடினேன். இதில் தவறு எதுவும் இல்லை” என்று தமிழக உயர் கல்வி அமைச்சர் விஸ்நாதன் கூறினார்.