

அமைச்சர் வன்னியரசு
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ரூ.30.83 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சமூக நல கல்லூரி மாணவியர் விடுதியை சமூக நீதித் துறை அமைச்சர் வன்னியரசு நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக அரசு நிதியுதவியுடன் சமூகநீதித் துறை சார்பில் தாட்கோ மூலமாக 82,356 சதுரஅடி பரப்பில் இந்த விடுதி கட்டப்பட்டு வருகிறது. இங்கு கல்லூரி மாணவிகள் 580 பேர் தங்கிப் பயில முடியும். இக்கட்டிடம் நவம்பர் மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும். இந்த விடுதியை முதல்வர் விஜய் திறந்து வைப்பார்.
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட வளமிகு வேளாண்மை திட்டத்தின்படி விரைவு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் 1,000 ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதி, பொருளாதார மேம்பாடு அடைவார்கள். பழங்குடியின மாணவர்களுக்கு ‘சிறப்பு கல்வி உதவித் திட்டம்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு தேவையான கூடுதல் செலவினத்தை முழுமையாக மாநில அரசே ஏற்றுக்கொள்ளும். இதன்மூலம் பழங்குடியின மாணவர்களின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்விச் சேர்க்கை உறுதி செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
சமூக நீதித் துறை செயலர் சுப்பையன், தாட்கோ மேலாண் இயக்குநர் செந்தில்ராஜ், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.