

ஆவடி: `அமைச்சர் பர்வேஸ் எனது மச்சான்தான்; உங்கள் சீருடையை கழற்றிவிடுவேன்’ என இளம்பெண் ஒருவர், நடுரோட்டில் போலீஸாரை மிரட்டிய காணொலி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் அவரது ஆண் நண்பரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாதவரம் பகுதியைச் சேர்ந்த தரணி (24) என்ற பெண்ணும் அவரது நண்பரான ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்த முகமது ஜவாஹீர் (30) என்பவரும் கடந்த 15-ம் தேதி மாலை அம்பத்தூர் மங்களபுரம் பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஆவடியில் இருந்து கோயம்பேடு நோக்கிச் சென்ற மாநகர பேருந்தால் சாலையில் தேங்கிய மழைநீர், தரணி மற்றும் முகமது ஜவாஹீர் மீது தெறித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த இருவரும் மாநகர பேருந்தை வழிமறித்து, ஓட்டுநர் முருகதாஸ் (58), நடத்துநர் ரகு ஆகியோரிடம் ஆபாசமான வார்த்தைகளை பேசி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, பேருந்தில் பயணம் செய்த பயணிகளையும் கீழே இறங்குமாறு கூறியுள்ளனர். இதனால், பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாயினர். தகவலறிந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸாரிடமும் தரணி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது, அவர், ‘‘அமைச்சர் பர்வேஸ் எனது மச்சான்தான்; என் மீது நடவடிக்கை எடுத்தால் உங்கள் சீருடையை கழற்றி விடுவேன்’’ என மிரட்டல் விடுத்தார். இதுதொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதனிடையே, மாநகர பேருந்து ஓட்டுநர் முருகதாஸ் அளித்த புகாரின்பேரில் அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தரணியின் நண்பரான முகமது ஜவாஹீரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவாகிவிட்ட தரணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.