

சிவகாசி: மத்திய அரசு தமிழகத்துக்கு உரிய நிதி பகிர்வு வழங்காத நிலையிலும், உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அதிக நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருவதாக, சிவகாசியில் ரயில்வே மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டிய நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சிவகாசி மாநகராட்சியில் ரூ.45.6 கோடி மதிப்பில் திருத்தங்கல் ரயில்வே மேம்பால கட்டுமான பணி மற்றும் ரூ.58 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட சுற்றுச்சாலை அமைக்கும் பணிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டினார்.
அப்போது அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: சிவகாசி சாட்சியாபுரம் ரயில்வே மேம்பாலத்தை ஒப்பந்த காலத்திற்கு முன்னரே கட்டுமான பணிகளை முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது திராவிட மாடல் அரசு. திருத்தங்கல் பாலம் கட்டுமானப் பணிகளும் விரைவில் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும்.
சிவகாசி சுற்றுசாலை திட்டத்தில் முதற்கட்ட பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ள நிலையில், இரண்டாம் கட்ட பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டு உள்ளது. சிவகாசிக்கு புதிய மாநகராட்சி அலுவலகம், பல்நோக்கு மாநாட்டு கூடம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி மக்கள் திட்டங்களை நிறைவேற்றி வருபவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். அவர் முதல்வராக வந்த பின்னர் தான் சிவகாசியின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் வளர்ச்சிக்கும் சிவகாசி அடிப்படை என்பதால் பல்வேறு திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிவகாசி தொகுதிக்கு முதல்வர் தான் விடியலை தந்து உள்ளார்.
தமிழகத்தில் 1.31 லட்சம் பெண்களுக்கு மாதம் ஆயிரம் மகளிர் உரிமை தொகை வழங்கப்பட்டு வருகிறது. விடியல் பயணம், காலை உணவு, கல்லூரி மாணவிகளுக்கு ஊக்கத்தொகை என பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மத்திய அரசு உரிய நிதியை வழங்குவதில்லை. நிதி அமைச்சர் என்ற முறையில் ஒவ்வொரு முறையும் நான் டெல்லி செல்லும் போது நிதி கேட்டு கோரிக்கை விடுத்தும், நம்மிடம் பெரும் வரிக்கு ஈடான நிதி பகிர்வு நமக்கு வருவதில்லை. மத்திய அரசு நிதி தராவிட்டாலும், முதல்வர் பல்வேறு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி பணிகளை செய்து வருகிறார், இவ்வாறு அவர் பேசினார்.
மேயர் சங்கீதா, எம்.எல்.ஏ அசோகன், மாநகர் திமுக செயலாளர் உதயசூரியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.