

ஜனநாயகன் போஸ்டர் | உள்படம்: தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி
விஜய்யின் ‘ஜனநாயகன்’ பட சான்றிதழ் விவகாரம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்க தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷி மறுத்துள்ளார்.
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தை கேவிஎன் புரடெக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ஹெச்.வினோத் இயக்கியுள்ள இதை ஜன.9-ல் வெளியிடத் திட்டமிட்டிருந்த னர். படத்துக்குத் தணிக்கை சான்றிதழ் வழங்க மறுத்த மத்திய தணிக்கை வாரியம், படத்தை மறு ஆய்வுக்கு அனுப்பியது. இதை எதிர்த்து தயாரிப்பு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, ‘ஜனநாயகன்’ படத்தை மறுஆய்வு குழுவுக்குப் பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவர் உத்தரவை ரத்து செய்தார். அதை எதிர்த்து தணிக்கை வாரியத்தின் சார்பில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு, தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்குத் தடை விதித்து மேல்முறையீட்டு வழக்கை ஜன.20-ம் தேதிக்குத் தள்ளி வைத்தது.
இந்த உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், “சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய அமர்வை நாடுங்கள். ஜன. 20-ம் தேதியே இந்த விவகாரத்தை கூடுமான வரை விசாரித்து அன்றே உத்தரவு பிறப்பிக்க நடவடிக்கை எடுக்கும்” என்று கூறி மேல்முறையீட்டு மனுவை முடித்து வைத்தது.
இந்நிலையில், ஆங்கில ஊடகம் ஒன்று பேட்டியளித்த மத்திய தணிக்கை வாரிய தலைவர் பிரசூன் ஜோஷியிடம் ‘ஜனநாயகன்’ தணிக்கை பிரச்சினை பற்றி கேட்கப்பட்டது. அந்த விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் அதுபற்றி பேச மறுத்துவிட்டார்.
பின்னர் “த டாக்ஸிக்” படத்தின் டீஸர் சர்ச்சை பற்றி கேட்டபோது, “தற்போது நான் எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். யூடியூப் மற்றும் பிற டிஜிட்டல் தளங்களில் வரும் பல விஷயங்கள் தணிக்கை சான்று பெறாதவை. அவை மத்திய திரைப்படத் தணிக்கை வாரியத்தின் அதிகார வரம்புக்குள் வருவதில்லை. ஆன்லைனில் தாங்கள் பார்க்கும் அனைத்தும் தணிக்கை செய்யப்பட்டவை என்ற அனுமானத்துக்கு யாரும் வரவேண்டாம்.
திரைப்பட தணிக்கை வாரிய உறுப்பினர்களுக்குப் படங்கள் பார்த்து சான்றிதழ் அளிப்பது கடினமான வேலை. அவர்கள், திரைப் பட இயக்குநர்கள் சொல்வதையும் சமூகம் எதிர்பார்ப்பதையும் சமநிலைப்படுத்த முயற்சிக்கிறார்கள்” என்றார்.