

கோவை: தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டை யன் நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு வந்தார். விமான நிலையத்தி்ல் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் மாநிலம் முழுவதும் 18 மலைகளை காணவில்லை என ஆதாரத்துடன் அமைச்சர் எடுத்து கூறியுள்ளார்.
இதுகுறித்து உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். மலை அடிவாரங்களில் இருந்து கற்கள் வெட்டி எடுக்கப்பட்டபோது என்னென்ன வரிகள் கட்டப்பட்டு உள்ளன என்பது குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.
‘மலைகளை காணவில்லை’ என்று கூறியதும் எதிர்க்கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு ஜல்லி, மணல் உள்ளிட்ட கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்காக 20 நாட்களுக்கு முன்பாகவே அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தவெகவை விலைக்கு வாங்கிவிட முடியாதா என்று சட்டப்பேரவையில் பழனிசாமி பேசியது குறித்து கேட்கிறீர்கள். திமுகவுடன் இணைந்து அதிமுக ஆட்சி அமைக்கலாம் என நினைத்தபோது தான் இந்நிலைமை ஏற்பட்டுள்ளது.
சட்டப் பேரவையில் எம்எல்ஏக்கள் பேசிய பிறகு அவை குறிப்பில் இருந்து சில பகுதிகள் நீக்கப்படுவது வழக்கமான மரபுதான். அவைக்குறிப்பில் நீக்கப்பட்ட வார்த்தைகள், சமூக வலைதளங்களில் பரவி வருவது தொடர்பாக செய்தித்துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டுள் ளார். இவ்வாறு அவர் கூறினார்.