ரூ.10 கோடி கோயில் நிதியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அவசியமா? - திமுக ஆட்சியில் அனுமதி அளித்தது குறித்து அமைச்சர் ரமேஷ் விமர்சனம்

ரூ.10 கோடி கோயில் நிதியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அவசியமா? - திமுக ஆட்சியில் அனுமதி அளித்தது குறித்து அமைச்சர் ரமேஷ் விமர்சனம்
Updated on
2 min read

சென்னை: பல கோயில்களில் பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில், கோயில் நிதி ரூ.10 கோடியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்ட முந்தைய ஆட்சியில் அனுமதி அளிக்கப்பட்டதாக அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் விமர்சித்தார்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நேற்று நடந்தது.

அதன் விவரம்:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்: ஆளுநர் உரையில் உள்ள அனைத்து விஷயங்களும் ஆளுங்கட்சியினர் வலை தளங்களில் ‘ரீல்ஸ்’ போட உதவுமே தவிர, ‘ரியல்’ பிரச்சினைகளுக்கு தீர்வு தருவதாக இல்லை.

அறநிலையத் துறையின் அசையும், அசையா சொத்துகளின் வருவாய், அதன் புனிதமான நோக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்று ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது.

இதன்மூலம், அறநிலையத் துறையே இருக்கக் கூடாது என பாஜகவின் குரலாக தவெக அரசு சொல்கிறதா என்ற சந்தேகம் எழுகிறது. அந்த நிதியில் பள்ளி, கல்லூரிகள் தொடங்கக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

இந்த நிலைப்பாடு, திருமண மண்டபங்கள், வணிக வளாகங்களுக்கு மட்டுமின்றி, பள்ளி, கல்லூரிகளுக்கும் பொருந்துமா? இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சி.ரமேஷ்: பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்யாமல், வணிக நோக்கத்துடன் திருமண மண்டபங்கள் போன்றவற்றைக் கட்டுவதையும், அதன்மூலம் வருவாய் ஈட்டுவதையும் மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டு திட்டங்கள் தொடங்கப்பட்டன.

அதன்மீது பல்வேறு வழக்குகளில் தடை விதிக்கப்பட்டதால், அத்திட் டங்களை ரத்து செய்துள்ளோம். குன்னூர் விநாயகர் கோயில் நிதி ரூ.10 கோடியில் அங்கு பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்ட முந்தைய அமைச்சர் அனுமதி அளித்திருக்கிறார்.

மாதத்துக்கு சராசரியாக 500 பக்தர்கள்தான் அந்த கோயிலுக்கு வருவார்கள். அப்பகுதியைச் சுற்றியுள்ள 50 கோயில்களில் கழிவறை போன்ற அடிப்படை வசதிகள்கூட இல்லாத நிலையில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் அவசியமா? இதுபோன்ற திட்டங்களுக்கு தடை விதிக்கும் அரசாணையில், கோயில்கள், பக்தர்கள் பயன்பெறும் வகையில் மாற்றுத் திட்டம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளோம்.

பழநியில் சித்த மருத்துவமனை கட்ட மத்திய அரசு நிதி தர தயாராக இருந்தது. கடந்த ஆட்சியில் அந்த திட்டத்தை கிடப்பில் போட்டனர். நாங்கள் இப்போது அதை கையில் எடுத்துள்ளோம்.

முன்னாள் அமைச்சர் சேகர்பாபு: சட்ட விதிகளுக்கு உட்பட்டு, தொகுதி எம்எல்ஏக்களின் கோரிக்கையை ஏற்றுதான் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. குன்னூரில் நகராட்சி பரிந்துரையின்பேரில், பன்னடுக்கு வாகன நிறுத்தம் கொண்டு வந்தால், கோயிலுக்கு வருமானம் பெருகும் என்பதால் கொண்டு வரப்பட்டது.

அமைச்சர் ரமேஷ்: நகராட்சி நிர்வாகத்திடம் நிலத்தை குத்தகைக்கு கொடுத்து, அதில் வரும் வருமானத்தில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கலாம். ஆனால், ரூ.10 கோடி கோயில் நிதியையே எடுத்து பன்னடுக்கு வாகன நிறுத்தம் கட்ட வேண்டுமா? பக்தர்கள் யாரும் பன்னடுக்கு வாகன நிறுத்தம் கேட்கவில்லை. அடிப்படை வசதி களைத்தான் கேட்கிறார்கள். இவ்வாறு விவாதம் நடந்தது.

ரூ.10 கோடி கோயில் நிதியில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அவசியமா? - திமுக ஆட்சியில் அனுமதி அளித்தது குறித்து அமைச்சர் ரமேஷ் விமர்சனம்
ஆபத்தான தொழிற்சாலைகளில் ஆய்வு செய்யப்படும்: பேரவையில் அமைச்சர் முகமது பர்வேஸ் உறுதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in