

அமைச்சர் பெரியசாமி
திண்டுக்கல்: ஆத்தூர் தொகுதில் ஒரே இரவில் 22,000 வாக்காளர்கள் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இ.பெரியசாமி தெரிவித்தார்.
அம்பேத்கரின் 70-வது நினைவு தினத்தையொட்டி, இன்று (டிச.6) திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த அமைச்சர் இ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் எந்த கருத்தும் தெரிவிக்காதது குறித்து அவரிடம் தான் கேட்க வேண்டும்.
தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். கருத்து கூறவில்லை என்றால் அது பற்றி பேசி என்ன பயன். பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தது குறித்து அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும். அவர் அனைத்து கட்சிகளிலும் இருந்தார். ஒரே ஒரு கட்சியில் நான் இருக்கிறேன். என்னுடைய ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் ‘ஆப்சென்ட்’ எனக்கூறி 6,000 பேர், இறந்தவர்கள் எனக்கூறி 16,000 பேர் என மொத்தம் 22,000 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன். திண்டுக்கல்லில் தேர்தல் அலுவலர்கள் வாக்காளர்களை சேர்ப்பதற்கு பதிலாக, ஒரே அறையில் இருந்து பெயர்களை நீக்கி விட்டனர். ஆத்தூர் தொகுதியில் இடமாற்றம் எனக்கூறி 22,000 பேரை நீக்கியுள்ளனர். அவர்கள் பெயரை சேர்ப்பதாக திண்டுக்கல் ஆட்சியர் கூறியிருக்கிறார். அதில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. நடக்கட்டும், என்ன செய்ய முடியும்.
மாவட்ட ஆட்சியர் தான் விளக்கம் சொல்ல வேண்டும். வாக்காளர்கள் தொகுதியில் இருக்கிறார்களா? என்று, அங்கு சென்று பார்த்தார்களா? . வாக்காளர்கள் மனுவைப் பூர்த்தி செய்து கொடுத்தும் அவர்களை இடம்பெயர்ந்தோர் பட்டியலில் சேர்த்து உள்ளார்கள். சிலரை இறந்தவர்களாகச் சேர்த்து உள்ளார்கள்.
குறிப்பாக, திண்டுக்கல்லில் உள்ள திமுக பிரமுகர் முருகானந்தம் என்பவரை இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து உள்ளார்கள்.
எஸ்ஐஆர் பணிக்காக ஊழியர்கள் எங்குமே செல்லவில்லை. அவர்கள் உட்கார்ந்த இடத்திலேயே விண்ணப்பங்களை நிரப்பிவிட்டு ஏதோ கணக்கு காட்ட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்காக வேலை செய்கிறார்கள்.
எஸ்ஐஆர் பணி முழுமையாக நடைபெறவில்லை. தேர்தலை நடத்துங்கள் வாக்காளர்கள் வந்து வாக்களிக்கட்டும். இல்லையெனில் வாக்களிக்காமல் கூட போகட்டும். ஆனால், எஸ்ஐஆர்-ஐ ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை. ஒரு நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் இல்லை. இதற்கு சட்டமே வழிவகுத்து உள்ளது. உங்களுடைய உரிமை பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம் என கூறியுள்ளது. அதனால் தான் நாங்கள் சென்று உள்ளோம், என்றார்.