

சென்னை: மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பணியாளர் பணியிடங்களை நிரப்பும் அறிவிப்பு அடுத்த ஒரு வாரத்துக்குள் வெளியாகும் என மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.
வடகிழக்குப் பருவமழையின் போது ஏற்படும் மின்தடைகளை சரிசெய்து, மக்களுக்கு விரை வான சேவையை வழங்கும் நோக்கில் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் புதிய மின்தடை நீக்கும் மையங்கள் மற்றும் 12 உயரழுத்த மின்புதைவட பழுதுகளை கண்டறியும் குழுக்களின் செயல்பாட்டினை மின்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று சென்னை அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, பசுமை எரிசக்திக் கழக மேலாண்மை இயக்குநர் தர், மின்உற்பத்தி கழக மேலாண்மை இயக்குநர் கோவிந்த ராவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது: வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த 70 மின்தடை நீக்கும் மையங்களுடன், தற்போது கூடுதலாக 82 மையங்கள் ஏற்படுத்தப் பட்டுள்ளன.
இதன்மூலமாக மொத்தம் 152 மின்தடை நீக்கும் மையங்கள் செயல்பட உள்ளன. இவற்றுக்காக 152 ஒப்பந்த வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்துக்கும் 4 பேர் வீதம் 608 பணியாளர்களைப் பணியமர்த்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும், உயரழுத்த மின்புதைவடப் பழுதுகளைச் சரிசெய்ய பொறியாளர்கள் உள்ளிட்ட 36 பணியாளர்களைக் கொண்ட 12 சிறப்புக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இரவுநேர மின்பழுதுகளைச் சரிசெய்ய ஒவ்வொரு மாவட் டத்திலும் செயற்பொறியாளர் தலைமையில் இக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மின்வாரியத்தில் காலியாக உள்ள களப்பணியாளர் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான அறிவிப்பு ஒரு வாரத்துக்குள் வெளியாகும். இதற்காக டிஎன்பிஎஸ்சி அனுமதிக்கு காத்திருக்கிறோம்.
மின்சாரத்தை சேமிக்கும் பேட்டரி சேமிப்புத் திட்டங்களை ஊக்குவிக்க புதிய கொள்கை உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டங்களில் முதலீடு செய்வோருக்கு மானியம் வழங்குவது குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது.
வீடுகளில் சூரியசக்தி மின் உற்பத்தி அமைப்புகளை நிறுவ இதுவரை 28 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு, பரிசீலனையில் உள்ளன.
வரும் மார்ச் மாதத்துக்குள் ஒரு லட்சம் வீடுகளில் சூரியசக்தி அமைப்புகளை நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் குறைந்தபட்சம் 500 மெகாவாட் மின் சாரத்தை வீடுகளிலேயே உற் பத்தி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.