

புதுடெல்லி/சென்னை: தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக, புஸ்ஸி ஆனந்த் மற்றும் 4 அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.சீனிவாசன் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவில், “தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக, குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் அதிமுக முன்னாள் எம்எல்ஏ-க்கள், சத்தியபாமா, மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.
தேர்தல் முடிந்தபிறகு, எவ்வித நியாயமான காரணமும் இன்றி தங்களின் பதவியை ராஜினாமா செய்யும் அல்லது சட்டப்பேரவைத் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்படும் வேட்பாளர்கள், மீண்டும் குதிரை பேரத்தில் ஈடுபடுவதைத் தடுக்க உச்ச நீதிமன்றம் தனது சிறப்பு அதிகாரமான பிரிவு 142-ஐப் பயன்படுத்தி கடுமையான புதிய விதிகளை உருவாக்க வேண்டும்.
அதுவரை, குற்றச்சாட்டுக்கு உள்ளான முன்னாள் எம்எல்ஏ-க்கள் 4 பேரும் சுயேச்சையாகவோ அல்லது எந்தவொரு அரசியல் கட்சியின் ஆதரவுடனோ இடைத்தேர்தல்களில் போட்டியிடக் கூடாது என தடை விதிக்க வேண்டும்” என கோரப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக் ஷி, வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், “இந்த விவகாரத்தில் ஏற்கெனவே எஃப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது, மேலும் கட்சித்தாவல் தகுதி இழப்பு குறித்த 10-வது அட்டவணையில் சில திருத்தங்கள் செய்வதற்கான தேவை உள்ளது” என தெரிவித்தார் அப்போது நீதிபதிகள், “ஒரு சட்டப்பேரவை உறுப்பினர், பதவி விலகி பின்னர் அமைச்சராவது அரசியல் நடைமுறையின் ஓர் அங்கம்.
எனவே எஃப்.ஐ.ஆர் மீது விசாரணை நடத்தப்படட்டும். தவறு கண்டறியும்பட்சத்தில் சட்டம் தனது கடமையைச் செய்யும்” என தெரிவித்து, மனுவை தள்ளுபடி செய்தனர்.