

மதுரை: குடும்பங்களை காப்பாற்றவே திமுக, அதிமுக ஆட்சிக்கு வர முயற்சிக்கிறது என அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார்.
திருப்பரங்குன்றம் அடுத்த திருநகர் பகுதியில் திருப்பரங்குன்றம் தவெக சட்டமன்ற உறுப்பினர் சிடிஆர் நிர்மல் குமார் அலுவலகம் திறப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக எம்பிக்கள் சு.வெங்கடேசன் (மதுரை), மாணிக்கம் தாகூர் (விருதுநகர்) பங்கேற்று அலுவலகத்தை திறந்து வைத்து, அமைச்சர் நிர்மல் குமாரை நாற்காலியில் அமர வைத்தனர்.
பிறகு செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: “சட்டமன்ற அலுவலகம் 24 மணி நேரமும் செயல்படும். அனைத்து மனுக்களும் பெறப்படும். நீட் நுழைவுத் தேர்வு குளறுபடியால் அது தேவையில்லை என்பதே எங்களின் எண்ணம். இத்தேர்வை மத்திய அரசால் சரியாக நடத்த முடியவில்லை. மாணவிகளின் கம்மல் துப்பட்டாவை கழற்று என சொல்கிறார்கள்.
வினாத்தாள்களை உங்களால் பத்திரமாக எடுத்து வர முடியவில்லை. கடந்த வாரம் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு பிரதமர் தான் பொறுப்பேற்க வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும்.
மேகேதாட்டு அணை விவகாரத்தை கர்நாடகத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் அரசியல் ரீதியாக பயன்படுத்துகின்றனர். நாம் சட்டரீதியாக முன்னெடுப்போம். நான் முதல்வன் திட்டம் பெயர் மாற்றம் குறித்து எந்த ஸ்டிக்கரும் ஒட்டவில்லை. பெயரில் குழப்பம் இருப்பதால் மாற்றப்பட்டுள்ளது.
அதிமுக - திமுக இருவரும் எதிராக இருந்து தேர்தலை சந்தித்துவிட்டு தற்போது, இருவரும் ஒன்று சேர நினைக்கின்றனர். தைரியம் இருந்தால் இருவரும் வெளிப்படையாக அறிவிக்கட்டும். முக.ஸ்டாலின், இபிஎஸ் சேர்ந்து திமுக குடும்பத்தை காப்பாற்ற ஆட்சிக்கு வர நினைத்தனர்.
இரு கட்சிகளும் தங்களது குடும்பத்தை காப்பாற்ற ஆட்சிக்கு வர முயற்சிக்கின்றனர். குறுக்கு வழியில் வர நினைத்தது பிடிக்காமல், இரு கட்சியின் தொண்டர்கள், நிர்வாகிகள் எல்லோரும் எங்களுடன் இணைக்கின்றனர். புதிதாக வருபவர்கள் உள்ளாட்சி தேர்தலை மனதில் வைத்து வரவில்லை.
தமிழகத்தில் முன்பெல்லாம் மாப்பிள்ளை (சபரீசன்) , பையன் (உதயநிதி) சொல்வதை கேட்ட பிறகே தொழில் தொடங்க முடியும். தற்போது இது போன்ற சூழல் இல்லை, இருக்காது. தலைமைச் செயலகத்தில் புரோக்கர்கள் இருந்த நிலை மாறி இப்போது பொதுமக்கள் செல்கின்றனர். தேவை இன்றி தொந்தரவு செய்தால் முதல்வர் அனுமதிக்க மாட்டார்.
மதுரை மெட்ரோ மட்டுமின்றி, மதுரை கழிவு நீர் கால்வாய்கள் கொண்டு வர இரண்டு எம்பிக்களுடன் சேர்ந்து ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அடிப்படை வசதி இன்றி மதுரை இருக்க காரணம் முன்னால் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் தான். இதனை சரி செய்ய ஆலோசனை நடத்தப்படும்" என்கிறார்.
வெங்கடேசன் எம்பி பேசும்போது, ‘ஒரு முன் மாதிரியான சட்டப்பேரவை அலுவலகமாக இந்த அலுவலகம் இருந்து செயல்பட வேண்டும். நீட் தேர்வு வேண்டாம். அடுத்தவர் உதடு என்ன பாட வேண்டும் என மோடி, அமித் ஷாவும் முடிவெடுக்க முடியாது. தேசிய கீதத்திற்கு யாரும் எதிரானவர்கள் அல்ல,’ என்றார்.
பின்னர், மாணிக்கம் தாகூர் எம்பி கூறுகையில், ‘ தமிழக அமைச்சர் அவையில் காங்கிரசுக்கு இடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி’ என்றார்.