அமைச்சர் நிர்மல் குமார்
கோப்புப் படம்
சென்னை: “ஒன்றிய அரசு மின் பற்றாக்குறை குறித்து சரியாக திட்டமிடாததால் ரூ.46-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ராஜஸ்தான் மாநிலம் வாங்குகிறது. மத்திய அரசு இதை சரியாக கணிக்காததால், அனைத்து மாநிலங்களுக்கும் பெரிய அளவில் பொருட்செலவும், செலவீனங்களும் ஏற்பட்டுள்ளது” என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் 82 புதிய மின் தடை நீக்கும் மையங்களின் செயல்பாட்டை அமைச்சர் நிர்மல் குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஒன்றிய அரசு மின் பற்றாக்குறை குறித்து சரியாக திட்டமிடாததால் ரூ.46-க்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ராஜஸ்தான் மாநிலம் வாங்குகிறது. வரும் நாட்களில் எல் நினோ காரணமாக மின்பற்றாக்குறை அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல திட்டமிட வேண்டும்.
மத்திய அரசு இதை சரியாக கணிக்காததால், அனைத்து மாநிலங்களுக்கும் பெரிய அளவில் பொருட்செலவும், செலவீனங்களும் ஏற்பட்டுள்ளது. மாநிலங்கள் மின்வெட்டு செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டுள்ளன. இனி வருங்காலத்தில் இது குறித்து அவர்கள் சரியாக திட்டமிட வேண்டும். மின்வாரியத்தில் உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்து ஒரு வாரத்தில் அறிவிப்பு வெளியாகும்.
இந்திய அளவில் மின் தட்டுப்பாடு உள்ளது. அனைத்து மாநிலங்களுமே பாதிக்கப்பட்டுள்ளன. மின்கம்பங்கள், டிரான்ஸ்பார்மர்கள் போதுமான அளவு கையிருப்பில் உள்ளன. மழைக் காலங்களை எதிர்கொள்ள முழுவீச்சில் மின்சாரத்துறை தயார் நிலையில் உள்ளது.” என்றார்.
திமுகவுக்கு அருகதை இல்லை...
செஞ்சி சிறுமி விவகாரம் பற்றி அவர் பேசுகையில், “செஞ்சியில் காணாமல் போனது நம் வீட்டுக் குழந்தை. காணாமல் போன சிறுமியை கண்டுபிடிக்க காவல்துறை முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கையே ஸ்டாலினால் கண்டிபிடிக்க முடியவில்லை. குழந்தை காணாமல் போன விஷயத்தில், இதுவே திமுக ஆட்சியாக இருந்திருந்தால் அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என மூடி மறைத்திருப்பார்கள்.
குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேச திமுகவுக்கு அருகதை இல்லை. திமுக ஆட்சியில் தமிழகம் முழுவதும் டேபிள் போட்டு பல பள்ளிகளில் வசூல் நடத்தினார்கள். மு.க.ஸ்டாலின் அரசியலை விட்டே விலக வேண்டும். தவெக ஆட்சியில் எந்த குற்றவாளியும் தப்பிக்க முடியாது.” என்றார்.
ஜெம் வீரமணி விவகாரமும் திமுக ஆட்சியில்தானே நடந்தது. இவ்வளவு பெரிய கட்டப்பஞ்சாயத்து உங்கள் ஆட்சியில் தானே நடந்தது. கோடநாடு விவகாரத்தில் திமுக ஆட்சிக்கு வந்தால் நடவடிக்கை எடுப்போம் எனச் சொன்னார்கள்.
தற்போது, என்ன நடவடிக்கை எடுத்தார்கள். அரசியல் ஆதாயம் இல்லாமல் திமுக எந்த விஷயத்தையும் செய்யாது. பணம் தான் அவர்களுக்கு குறி. திமுக பணம் பறிக்கும் கும்பலாகத்தான் செயல்பட்டது. எதில் தான் பணம் பார்ப்பது என்றில்லாமல் செயல்பட்டதால் தான் திமுகவை மக்கள் விரட்டி அடித்திருக்கிறார்கள்” இவ்வாறு அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.