

கரூர்: “உள்ளாட்சி தேர்தலில் அதிக பணம் கொடுப்பவர்களுக்கே வாய்ப்பு” என தவெக கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
கரூர் மாவட்டம் குளித்தலையில் தவெக கிழக்கு மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் பெரியபாலம் அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட இணைச் செயலாளராக இருந்த சதாசிவம் நீக்கப்பட்டு மாவட்ட பொருளாளராக இருந்த பொன் வினோத் மாவட்ட இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.
அவைத் தலைவராக இருந்த சக்திவேல் மாவட்ட துணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட சதாசிவம் அவரது ஆதரவாளர் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதற்கும், புதிய நிர்வாகிகள் நியமனத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தவெக கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் கட்சி நிர்வாகி ஒருவரிடம் 1.03 நிமிடம் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ இன்று (அக். 26ம் தேதி) வெளியாகி உள்ளது. அதில் பாலசுப்பிரமணியன் பேசியதாக கூறப்படுவது: 6 மாதங்களுக்கு அனைவரும் அமைதியாக இருங்கள். உள்ளாட்சித் தேர்தல் ஏப்ரலில் அறிவிக்கப்பட்டு மே மாதம் நடைபெறும். அப்போது வாருங்கள். யார் பெரிய அமவுண்ட்டாக கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு சீட். ரூ.15 லட்சத்துக்கும் அதிகமாக யார் காசு தருகிறார்கள் எனப் பெயர் எழுதி பெட்டியில் போட்டுவிடலாம். டெண்டர் மாதிரி, யாருக்கு என்ன பதவி, எவ்வளவு தொகை என எழுதிப் போட்டுவிடலாம்.
ஆனந்த் அண்ணனிடம் கூட்டிச் செல்கிறேன். அவரிடம் நானே சொல்லி விடுகிறேன். பெட்டியை அவரிடம் கொடுத்துவிடலாம், அவர் பார்த்துச் சொல்லட்டும் நான் பயப்பட மாட்டேன். இவ்வாறு அந்த ஆடியோ முடிவடைகிறது.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத கட்சி நிர்வாகிகள் தெரிவித்தது: கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்ரமணியன் தொடர்பாக கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை தலைமைக்கு தெரிவித்துள்ளோம்.
உள்ளாட்சி தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு வாய்ப்புகள் வழங்குவதற்கு ரூ.15 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை அதிக தொகை வழங்குபவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். பொதுச்செயலாளர் ஆனந்த் முன்னிலையில் தொகை வைக்கப்பட்டு அவர் தேர்வு செய்பவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இந்த ஆடியோ உள்ளிட்ட மேலும் பல ஆடியோக்கள் உள்ளன.
லாட்டரி, கிரஷர், பிற தொழில் நிறுவனங்களிடம் இருந்து பணம் வசூலிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கேள்வி எழுப்பும் கட்சி நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டு, மிரட்டப்படுகின்றனர். இதுகுறித்து கட்சி தலைமை விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர்.
மேலும், பாலசுப்பிரமணியன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக புகார் அனுப்பியுள்ளோம், இதுகுறித்து பல ஆடியோக்களும் உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தவெக கரூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், “சரியாக செயல்படாத கட்சி நிர்வாகிகள் நீக்கப்பட்டு ஏற்கெனவே மாற்று பொறுப்புகளில் இருந்தவர்களுக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சிலர் பதவிக்காக அலைகின்றனர். காழ்ப்புணர்ச்சி காரணமாக ஆடியோக்கள் வெளியிட்டு வருகின்றனர். பணம் வாங்கினால் தான் தவறு. உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பணம் பெறுவது தொடர்பாக நான் எதுவும் பேசவில்லை” என்றார்.