ஜல்லிக்கட்டை இழிவாகப் பேசினாரா தவெக எம்எல்ஏ? - அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு

அமைச்சர் நிர்மல் குமார்

அமைச்சர் நிர்மல் குமார்

Updated on
2 min read

மதுரை: “திமுக ஆட்சியில் கலைஞர் பெயரை சூட்டுவதற்காகவே ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்டினர். ஜல்லிக்கட்டு என்பது பொழுதுபோக்கல்ல, உணர்வு சம்பந்தப்பட்டது. அத்தகைய உணர்வுப்பூர்வமான விளையாட்டை ஸ்டேடியம் கட்டி ஜல்லிக்கட்டு நடத்தி திமுக இளைஞர்களை தவறாக வழிநடத்தியது என்றே சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவையில் கூறினார். அதற்குள் மைக் ஆஃப் ஆகிவிட்டது” என்று அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் குடமுழுக்கு விழா தொடர்பாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று மீனாட்சி அம்மன் கோயிலில் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்பு செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “திமுக ஆட்சியில் மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களின் உறவினர்களையே அறங்காவலர்களாக நியமித்து பதவி தந்துள்ளனர். தவெக ஆட்சியில் அதெல்லாம் நடக்காது. உண்மையான பக்தர்கள், கோயிலுக்காக பணியாற்றுபவர்களையே அறங்காவலர்களாக தேர்வு செய்யவுள்ளோம்.

தவெக ஆட்சியில் திமுக மாவட்டச் செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்களின் உறவினர்கள் யாரும் குழுவில் இருக்க முடியாது. திமுகவினருக்கும் கோயிலுக்கும் என்ன சம்பந்தம்? கோயில்கள் தனி நபர்களுக்கு சொந்தம் கிடையாது.

தனி நபர்கள் கோயிலில் அரசியல் செய்யக் கூடாது. மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா அழைப்பிதழில் அறங்காவலர்கள் குழு குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் அறங்காவலர்கள் பெயர் இல்லை என கேட்க யாருக்கும் அதிகாரம் கிடையாது.

கோயில் விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது. மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளோம். பாரபட்சமின்றி அனைவருக்கும் பொதுவான விழாவாக நடைபெறும். மாநகராட்சி சார்பில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இன்னும் ஒருவாரத்துக்குள் அனைத்து துறையினரும் ஒருங்கிணைந்து செயல்படும் திட்டம் உருவாக்கப்படும். செப்.11 முதல் முன்னேற்பாடு பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகிவிடும். உள்ளூர் விடுமுறை விடுவது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

தவெக நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளோம். யாருக்கும் பயந்தோ, யாருடனும் சமரசம் செய்வது கிடையாது. பரந்தூர் விமான நிலையத்தில் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளின் நிலங்களை ஒப்படைப்பது குறித்து தமிழக முதல்வர் நல்ல முடிவெடுப்பார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இருப்பைக் காட்டிக்கொள்ளவே தினமும் அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார். அவர் பேசுவது யாருக்காவது புரிகிறதா என்று சொல்லுங்கள். அவர்தான் ஓபிஎஸ் மாற்றிவிட்டு சசிகலாவை முதல்வராக்குங்கள் என்று சொன்னவர்.

அதிமுக 80 சதவீத அழிவுப்பாதைக்கு கொண்டு சென்றவர். தற்போது அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியை நீக்கிவிட்டு தன்னை பொதுச் செயலாளராக்குங்கள் என இன்னும் ஆறுமாதத்தில் கேட்பார்.

திமுக ஆட்சியில் கலைஞர் பெயரை சூட்டுவதற்காகவே ஸ்டேடியம் கட்டினர். அவனியாபுரம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு என கலாச்சாரம் உள்ளது. ஜல்லிக்கட்டு என்பது பொழுதுபோக்கல்ல, உணர்வு சம்பந்தப்பட்டது.

அத்தகைய உணர்வுப்பூர்வமான விளையாட்டை ஸ்டேடியம் கட்டி ஜல்லிக்கட்டு நடத்தி திமுக இளைஞர்களை தவறாக வழிநடத்தியது என்றே சோழவந்தான் தொகுதி எம்எல்ஏ சட்டப்பேரவையில் கூறினார். அதற்குள் மைக் ஆஃப் ஆகிவிட்டது.

அதற்கு நான் விளக்கமளித்தது சட்டப்பேரவையில் இருந்த அனைவருக்கும் தெளிபடுத்தினேன். ஆனால் வெளியில் இதை திமுகவினர் தவறாக பரப்பிவருகின்றனர்.

தமிழக முதல்வர் விஜய், பிரதமர் பதவிக்கு போட்டியிடுவது குறித்து பேசவேண்டிய அவசியம் தற்போது எழவில்லை” என்று அவர் கூறினார்.

அதேவேளையில், “இளைஞர் சமுதாயத்தை நல்வழிப்படுத்த வேண்டும், ஒரு கூண்டுக்குள் அடைக்கக் கூடாது என்ற நல்லெண்ணத்துடன் தான் கூறினேனே தவிர, தவறான உள்நோக்கம் கிடையாது” என்று தவெக எம்எல்ஏ கருப்பையா விளக்கம் அளித்துள்ளார்.எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “தமிழர்களின் பல்லாயிரம் ஆண்டுகாலப் பண்பாட்டு அடையாளமாகவும், வீரத்தின் வெளிப்பாடாகவும், நாட்டு மாடுகளைக் காக்கும் மரபின் நீட்சியாகவும் திகழும் ஏறுதழுவுதல் எனும் ஜல்லிக்கட்டு, இளைஞர்களைச் சீரழிக்கும் விளையாட்டு என்று தமிழ்நாடு சட்டப்பேரவையிலேயே சோழவந்தான் சட்டப்பேரவை உறுப்பினர் கருப்பையா பேசியிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது” என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சாடியுள்ளார்.

அதேபோல், “தமிழர்களின் பாரம்பரியத்தோடும், பண்பாட்டோடும் பின்னிப் பிணைந்த வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் இளைஞர் சமுதாயத்தைச் சீரழிக்கின்றன என்ற சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையாவி பேச்சு கடும் கண்டனத்துக்குரியது” என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளதும் கவனிக்கத்தக்கது.

<div class="paragraphs"><p>அமைச்சர் நிர்மல் குமார்</p></div>
“இடஒதுக்கீட்டு மானிய கோரிக்கையில் சமூக நீதி தலைவர்களின் பெயர்களை நீக்கியது தவறு” - மு.வீரபாண்டியன்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in