

மு. வீரபாண்டியன் |கோப்புப் படம்
பெரம்பலூர்: “இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சமூக நீதி தலைவர்களான நேரு, பெரியார், அம்பேத்கரின் பெயர்களை குறிப்பிடாமல் பேசியது கண்டனத்துக்குரியது. சாராபாய், அப்துல் கலாம் போன்ற மாபெரும் தலைவர்களை கொடுத்தவர் நேரு. எனவே, தமிழக அரசு மீண்டும் அவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும்” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.
பெரம்பலூரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன் பேசுகையில், “பெரம்பலூரில் மழை குறைவால் விவசாயம் பாதிக்கப்பட்டதுடன், குடிநீர் பஞ்சமும் நிலவுகிறது. எனவே பெரம்பலூரை வறட்சி பாதித்த மாவட்டமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
பெரம்பலூர் உள்ளிட்ட பல இடங்களில் தொழிலாளர் சங்கத்தினர் கொடியேற்ற போலீஸார் அனுமதி வழங்க மறுக்கின்றனர். தொழிலாளர்கள் சங்கம் அமைப்பதும், கொடியேற்றுவதும் தொழிலாளர்களின் கடமை. அதற்கு போலீஸார் தடைவிதிக்கக் கூடாது.
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க் கடனை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். இதற்கு ஒன்றிய அரசின் நிதியை தமிழக அரசு கேட்டு பெறவேண்டும். இதேபோல் கிடப்பில் போடப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்த மாநில அரசு, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்திற்கான நிதியை கேட்டு பெற வேண்டும்.
மதுரை - கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு மத்திய, மாநில அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும். வனம் சார்ந்த மக்களால் இயற்கை வளங்கள் சூறையாடப்படவில்லை.
நாடு கடந்த நிறுவனங்களால்தான் வனம் சூறையாடப்படுகிறது. எனவே, மத்திய அரசு தொல்குடிகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டும். மாநில அரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து மலைவாழ் மக்களின் உரிமை மீட்டு தரவேண்டும்.
இந்தியாவில் மதச்சார்ப்பின்னை, மாநில உரிமை, சட்டம், நாடாளுமன்ற உரிமைகள் சிதைந்து வருகிறது. இவற்றைப் பாதுக்கப்பட வேண்டி டெல்லியில் செப்டம்பர் 1-ம் தேதி மாபெரும் பேரணி நடத்த இருக்கிறோம். வேலையின்மை பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காணவேண்டும். படித்த இளைஞர்கள் புலம்பெயர்வதை தடுக்க வேண்டும். தொல்குடிகள், கிராம மக்கள் வசிக்கும் இடங்களில் வேலைவாய்ப்பை அதிகரிக்க வேண்டும்.
நாடாளுமன்றத்தில் இதுவரை எவ்வளவு வேலை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் முதலீட்டாளர்களுக்கு கிடைத்த லாபம் எவ்வளவு என்பதை மத்திய அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். நாடு கடந்த நிறுவனங்கள் இந்தியாவின் வளங்களை சூறையாடுவது ஏற்புடையது அல்ல.
மாறாக தொன்மையான மற்றும் குடிசை தொழில்களுக்கு மத்திய அரசு முக்கியதுவம் வழங்கலாம். உள்ளூர் மக்களின் தொழில்களை அழித்துவிடக் கூடாது. எனவே, இந்தியாவுக்குத் தேவை, பாதுகாப்பான தொழிற்சாலைதான். பேரழிவை ஏற்படுத்தும் தொழிற்சாலைகள் அல்ல. பெரம்பலூர் சிலிண்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
சட்டப்பேரவை என்பது விவாத மேடையாக இருக்க வேண்டும். குறை சொல்வதற்கோ, அவதூறு பேசுவதற்குகோ இடம் கொடுக்க கூடாது. மக்கள் நலன் சார்ந்த உரையாடல்கள் மட்டுமே நிகழ்த்தப்படவேண்டும்.
அரசு திட்டங்களுக்காக விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை நாங்கள் எதிர்க்கிறோம். பினாமி மற்றும் புறம்போக்கு சொத்துகளை கண்டறிந்து அரசின் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
முதல்வர் விஜய் பிரதமராவார் என்பது தவெகவின் சொந்த கருத்து. கருத்து சுதந்திரத்தில் சவாரி செய்ய விரும்பவில்லை.
இடஒதுக்கீடு மானிய கோரிக்கையில் சமூக நீதி தலைவர்களான நேரு, பெரியார், அம்பேத்கரின் பெயர்களை குறிப்பிடாமல் பேசியது கண்டனத்துக்குரியது. சாராபாய், அப்துல் கலாம் போன்ற மாபெரும் தலைவர்களை கொடுத்தவர் நேரு. எனவே தமிழக அரசு மீண்டும் அவர்களின் பெயர்களை சேர்க்க வேண்டும்.
விலைவாசி உயர்வு என்பது மத்திய அரசின் தோல்வியைக் காட்டுகிறது. கலப்படம், பதுக்கல், கள்ளச்சந்தை, கருப்பு பணத்தை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். உழைக்கும் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்கவும், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.