தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி இல்லை: மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் சூசகம்

“திருப்பரங்குன்றத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும்”
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார். உடன் மதுரை ஆட்சியர் ஆகாஷ், எஸ்.பி. அர்விந்த்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார். உடன் மதுரை ஆட்சியர் ஆகாஷ், எஸ்.பி. அர்விந்த்.

Updated on
3 min read

மதுரை / சென்னை: ​திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​றும் விவ​காரத்​தில் கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும் என்று மதுரை​யில் தமிழக சட்​டம் மற்​றும் மின்​துறை அமைச்​சர் சிடிஆர். நிர்​மல்​கு​மார் தெரி​வித்​துள்​ளார்.

முரு​க​னின் அறு​படை வீடு​களில் முதலா​வது படை வீடான திருப்​பரங்​குன்​றத்​தில் கார்த்​திகை தீபத் திரு​நாளின்​போது கோயில் நிர்​வாகம் சார்​பில் உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் அருகே தீபம் ஏற்​றப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், கடந்த 2025 டிச.3-ம் தேதி கார்த்​திகை தீபத் திரு​நாளின்​போது, மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணிலும் தீபம் ஏற்ற உத்​தர​விட வேண் டும் என உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் எழு​மலை​யைச் சேர்ந்த ராம. ரவி​கு​மார் உள்​ளிட்​டோர் மனு தாக்​கல் செய்​தனர்​.

இதை விசா​ரித்த நீதிபதி ஜி.ஆர்​. சு​வாமி​நாதன், திருப்​பரங்​குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணிலும் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என டிச.1-ம் தேதி உத்​தர​விட்​டார். அதன்​படி, டிச.3-ம் தேதி தீபம் ஏற்​று​வதற்கு மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார் தலை​மை​யில் ஆயிரக்​கணக்​கானோர் கோயில் முன்பு திரண்​டனர். ஏராள​மான போலீ​ஸார் பாது​காப்பு பணி​யில் ஈடு​பட்​டனர். ஆனால், வழக்​கம்​போல உச்​சிப்​பிள்​ளை​யார் கோயில் அருகே உள்ள தீபத்​தூணில் மட்​டுமே தீபம் ஏற்​றப்​பட்​டது. மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​பட​வில்​லை. இதனால், பெரிய அளவில் போராட்​டம் நடந்​தது.

இதுகுறித்து மீண்​டும் விசா​ரித்த நீதி​மன்​றம், டிச.4-ம் தேதி இரவு மத்​திய தொழிலக பாது​காப்பு படை​யின் துணை கமாண்​டன்ட் பாது​காப்​பில் மலை மீதுள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்ற மனு​தா​ரரை அனு​ம​திக்க வேண்​டும் என மீண்​டும் உத்​தரவிட்டது. அப்​போதைய மாவட்ட ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், 144 தடை உத்​தரவு பிறப்​பித்​தார். இதை காரணம் காட்​டி, நீதி​மன்ற உத்​தரவை செயல்​படுத்த முடி​யாது என போலீ​ஸார் தடை விதித்​தனர்.

இதையடுத்​து, மாவட்ட ஆட்​சி​யர், மாநகரக் காவல் ஆணை​யர், கோயில் துணை ஆணை​யர் மீது நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்​பட்​டது. டிச.5-ம் தேதி ஆட்​சி​யர் பிறப்​பித்த 144 தடை உத்​தரவு நீக்​கப்​பட்டு மலை உச்​சி​யில் தீபம் ஏற்ற உத்​தர​விடப்​பட்​டது. எனினும், 3-வது முறை நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தர​வும் நிறைவேற்​றப்​பட​வில்​லை.

இதற்​கிடையே, நீதி​மன்ற அவம​திப்பு வழக்கு தொடரப்பட்​டதை எதிர்த்தும், அதற்கு தடை கோரி​யும் தமிழக அரசு மற்​றும் அதி​காரி​கள் தரப்​பில் மேல்​முறை​யீடு செய்​யப்​பட்​டது. இந்த மனுக்​கள் அனைத்​தும் விசா​ரிக்​கப்​பட்ட நிலை​யில், தனி நீதிபதி உத்​தரவை உறுதி செய்த நீதிப​தி​கள், ‘‘திருக்​கார்த்​தி​கை​யின்​போது வழக்​க​மான இடத்​தி​லும், கூடு​தலாக மலை மீதுள்ள தீபத்​தூணிலும் கோயில் நிர்​வாகம் தீபம் ஏற்ற வேண்​டும்’’ என்று உத்​தரவு பிறப்​பித்​தனர். இதை எதிர்த்​தும், மறுசீ​ராய்வு கோரி​யும் தமிழக அரசு தரப்​பில் மனுதாக்​கல் செய்​யப்​பட்​டது.

நீதி​மன்ற அவம​திப்பு தொடர்​பான இரு நீதிப​தி​கள் அமர்வு விசா​ரணை​யின்​போது, கார்த்​திகை தீப வழக்​கில் தனி நீதிப​தி​யின் அனைத்து உத்​தர​வு​களுக்​கும் தடை ஆணை பிறப்​பிக்​கப்​பட்​டது. இந்த வழக்கு கடந்த வாரம் விசா​ரணைக்கு வந்​த​போது, ‘‘தனி நீதிபதி உத்​தரவை செயல்​படுத்​து​வ​தில் அரசுக்கு என்ன சிக்​கல் உள்​ளது? வழக்​கில் அரசின் நிலைப்​பாடு என்ன என்​பதை தெரியப்​படுத்த வேண்​டும்’’ என்று நீதிப​தி​கள் கூறினர். மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​றக் கூடாது என்​ப​தில் கடந்த திமுக அரசு உறு​தி​யாக இருந்​தது. இந்த நிலை​யில், புதி​தாக பொறுப்​பேற்​றுள்ள தவெக அரசு, இதில் என்ன நிலைப்​பாடு எடுக்​கும் என்​ப​தில் பல்​வேறு தரப்​பிலும் மிகுந்த எதிர்​பார்ப்பு இருந்​தது.

இந்​நிலை​யில், மதுரை​யில் மாவட்ட உயர் அதி​காரி​களின் ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது. இதில் திருப்​பரங்​குன்​றம் எம்​எல்​ஏ​வும், தமிழக சட்​டம் மற்​றும் மின்​துறை அமைச்​சரு​மான நிர்​மல்​கு​மார் பங்​கேற்​றார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், ‘‘திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்​றும் விவ​காரத்​தில் கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்பு இருந்த நிலையே தொடரும். மக்​கள் அமைதியை விரும்​புகின்றனர். தமிழக அரசின் கொள்​கை​யும் அது​தான்’’ என்​றார். இதன்​மூலம் தீபத்​தூணில் தீபம் ஏற்ற அனு​மதி இல்லை என்​பதை அவர் சூசக​மாக தெரி​வித்​துள்​ளார்.

தீபம் ஏற்ற பாஜக வலியுறுத்தல்

இந்நிலையில், ​தீபத்தூணில் தீபம் ஏற்ற அரசு அனு​ம​திக்க வேண்​டும் என்று தலை​வர்கள் வலியுறுத்தி உள்​ளனர்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார்நாகேந்​திரன்: திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்ற நீதி​மன்​றம் அனு​மதி அளித்​தும், சட்​டம் பயின்ற அமைச்​சர் நிர்​மல்​கு​மார் முரணாகப் பேசுவது வருத்​தம் அளிக்​கிறது. அவர் சட்​டத்​துறை அமைச்​ச​ராக இருப்​ப​தற்​குத் தகு​தி​யானவரா என்ற கேள்வி எழுகிறது.

தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்: திருப்பரங்குன்றத்தில் பெரும்பான்மை மக்களின் உணர்வுகள் மதிக்கப்படாததால்தான் முந்தைய அரசு புறந்தள்ளப்பட்டது. அவசர காலத்தில் அடித்த விசில் சத்தத்தில் வெற்றி பெற்ற உங்களுக்கு உரிமைக்காக போராடும் மக்களின் உரத்த குரல் காதில் விழவில்லை. உயர் நீதிமன்றத் தீர்ப்பையோ, வழக்கத்தையோ மதிக்காமல் அமைச்சர் பேசியுள்ளார்.

இந்து முன்​னணி மாநிலத் தலை​வர் காடேஸ்​வரா சுப்​பிரமணி​யம்: நீதி​மன்​றம் உத்​தர​விட்​டும்​கூட கடந்த திமுக ஆட்​சி​யில் திருப்​பரங்​குன்​றத்​தில் தீபம் ஏற்​றப்​பட​வில்​லை. புதி​தாக அமைந்த தவெக அரசு, மலை மீது தீபம் ஏற்ற அனு​ம​திக்க வேண்​டும்.

தீபம் வழக்​கின் பிர​தான மனு​தா​ரர் ராம.ரவிக்​கு​மார்: திரா​விட மாடல் அரசும், திருச்​சபை மாடல் அரசும் திருப்​பரங்​குன்​றம் மலை விவ​காரத்​தில் ஒட்​டிப் பிறந்த இரட்டை குழந்​தை​போலவே செயல்​படு​கிறது. தீபம் ஏற்​று​வது தொடர்​பான வழக்கு நீதி​மன்​றத்​தில் நிலு​வை​யில் உள்​ள​போது, அமைச்​சர் இவ்​வாறு பேசுவது, நீதித்துறை மீதான மக்​களின் நம்​பிக்கையை பாதிக்​கும். சட்​ட அமைச்சரின் கருத்தை இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சரும், ஒரு முருக பக்​த​ராக திருச்​செந்​தூர் முரு​கன் கோயிலுக்​குச் சென்று வந்த முதல்​வர் விஜய்​யும் ஆதரிக்​கின்​றனரா என்​பதை தெளிவுபடுத்த வேண்​டும். இவ்​வாறு அவர்​கள்​ கூறி​யுள்​ளனர்​.

<div class="paragraphs"><p>மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார். உடன் மதுரை ஆட்சியர் ஆகாஷ், எஸ்.பி. அர்விந்த்.</p></div>
“பாலியல் வன்கொடுமை செய்த 2 தவெக நிர்வாகிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்” - பாதிக்கப்பட்ட பெண் கண்ணீர்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in