அனைத்து சர்வே எண்களுக்கும் சந்தை வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உத்தரவு

அனைத்து சர்வே எண்களுக்கும் சந்தை வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து புல எண்களுக்கும் (சர்வே எண்) இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதி செய்யும்படி, அதிகாரிகளுக்கு அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராஜாஜி சாலையில் உள்ள பதிவுத்துறையின் மாவட்ட பதிவாளர் அலுவலகக் கூட்டரங்கில், அமைச்சர் த.லோகேஷ் தமிழ்ச்செல்வன் தலைமையில் பதிவுத்துறை அதிகாரிகள் பணித்திறன் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இதில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர் ஜெ.குமர குருபரன், பதிவுத்துறை தலைவர் ஜி.கே.அருண் சுந்தர்தயாளன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் அமைச்சர் அறிவுறுத்தியதாவது:

புகாருக்கு இடமளிக்காமல்...

பதிவுக்கு வரும் பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும். பொதுமக்களை அலுவலகத்தில் அமர வைப்பதுடன், அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். தாமதமின்றி அன்றே ஆவணங்களை பொதுமக்களிடம் திரும்ப வழங்க வேண்டும்.

அவர்களுக்கு பதிவு தொடர்பாக எழும் சந்தேகங்களை உடனுக்குடன் புரியும் வகையில், பொறுமையுடன் எடுத்துக்கூற வேண்டும். எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் செயல்பட வேண்டும்.

மேலும், கட்டிட களப்பணிக்காக ஆவணங்களை தாமதமில்லாமல் உடனுக்குடன் பார்வை யிட்டு ஆவணதாரர்களுக்கு திரும்ப வழங்க வேண்டும்.

நிலுவை ஆவணங்களை மாவட்டப் பதிவாளர்கள் ஆய்வு செய்து உடனுக்குடன் உரிய தீர்வு அளித்திட வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட வருவாய் இலக்கை அடைய அனைத்து முயற்சிகளையும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

அலைக்கழிக்கக் கூடாது

அனைத்து நிலபுல எண்களுக்கும் இம்மாத இறுதிக்குள் சந்தை வழிகாட்டி மதிப்பு இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

தேவையில்லாத காரணங்களுக்காக ஆவணங்களை நிலுவை வைத்து பொது மக்களை அலைக்கழிக்கக் கூடாது. பதிவுக்குத் தேவைப்படும் ஆவணங்களை சரி பார்த்து பதிவு செய்து வழங்க வேண்டும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.

அனைத்து சர்வே எண்களுக்கும் சந்தை வழிகாட்டி மதிப்பு நிர்ணயம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் உத்தரவு
இளைஞர்களை தவறாக வழிநடத்தும் சமூக ஊடகங்கள்: நடிகர் சரத்குமார் வேதனை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in