

படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி: தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி - காஜாமலையில் உள்ள ஜமால் முகமது கல்லூரியில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் கே.என்.நேரு இன்று தொடங்கி வைத்தார்.
திருச்சி மாவட்டம் காஜாமலை பகுதியில் திமுக சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி ஜமால் முகமது கல்லூரியில் இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த ஜல்லிக்கட்டு போட்டியை திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்கழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகர காவல் ஆணையர் என்.காமினி, திருச்சி மாநகர மேயர் மு.அன்பழகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் திருச்சி மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து சுமார் 750 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். போட்டியில் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கு டிராக்டர் மற்றும் காளையை அடக்கும் வீரருக்கு கார் வழங்கப்பட உள்ளன. இதற்காக விழா மேடை அருகே டிராக்டர், கார், சைக்கிள்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என ஏராளமான பரிசுகள் குவிக்கப்பட்டுள்ளன.
படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
திருச்சி மாநகராட்சி நகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி தலைமையில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், 108 ஆம்புலன்ஸ் 5 மற்றும் செவிலியர்கள் என 50-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர். கால்நடைத் துறை இணை இயக்குனர் ராஜசேகர் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் மாடுகளை பரிசோதித்து அனுமதித்தனர்.
காலை 8 மணி அளவில் தொடங்கிய போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றது. மதியம் 12.30 மணி வரை மாடுபிடி வீரர்கள் 6 பேர், காளை உரிமையாளர்கள் 19 பேர் மற்றும் ஒரு மாணவர் என 26 பேர் மாடு முட்டி காயமடைந்தனர். இதில் 9 பேர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
படங்கள்: ர.செல்வமுத்துகுமார்
காலை போட்டியை தொடங்கி வைத்து அமைச்சர் நேரு தொடர்ந்து மாநகரில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மீண்டும் 11.20 மணியளவில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் கல்லூரி மைதானத்திற்கு வந்தார். சிறிது நேரம் போட்டிகளை கண்டு ரசித்து விட்டு புறப்பட்டு சென்றார். ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் கல்லூரி வளாகத்தில் மத்திய ஜிஎஸ்டி மற்றும் சுங்கத்துறை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர்.
ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் ராஜாமலை பகுதியிலேயே திருச்சி மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம், திருச்சி சிறக டிஐஜி முகாம் அலுவலகம், நீதிபதிகள் குடியிருப்பு ஆகியவை அமைந்துள்ளன. போட்டியில் பங்கேற்க அழைத்து வந்த காளைகள் சாலைகளில் ஆங்காங்கே மரத்தடியில் கட்டி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பாதுகாப்பு காரணமாக ஆட்சியரின் முகாம் அலுவலகம் நுழைவாயில் கதவு மூடப்பட்டுள்ளது.