

புதுச்சேரி: இலவச எச்பிவி தடுப்பூசி திட்டத்தின் கீழ் புதுச்சேரியின் 4 பிராந்தியங்களில், 14 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு மார்ச் 8 முதல் தடுப்பூசி போடப்படும் என புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் செவ்வேள் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய செவ்வேள், “இந்தியாவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றநோயில் கர்ப்ப வாய் புற்றுநோய் இரண்டாவது இடத்தில் உள்ளது. 99.7 சதவீதம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மனித பாப்பிலோமா வைரசான எச்பிவி வைராஸ் ஏற்படுகிறது. இந்த புற்றுநோயை எச்பிவி தடுப்பூசி மூலம் முழுமையாக தடுக்கலாம்.
இந்த இலவச தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி, வருகிற பிப்.28ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் துவக்கி வைக்க உள்ளார். இத்திட்டத்தின் கீழ், 14 முதல் 15 வயதிற்கு உட்பட்ட சிறுமிகளுக்கு இலவசமாக எச்பிவி தடுப்பூசி செலுத்தப்படும். இந்த தடுப்பூசி ரூ.4 ஆயிரம் விலையுள்ளது. தனியாரிடம் கிடைப்பது மிக குறைவு. அதாவது ஒரு சதவீதம் தான் கிடைக்கும்.
மத்திய அரசு இந்த தடுப்பூசியை தகுதியுள்ள அனைவருக்கும் இலவசமாக தரவுள்ளது. புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாமில் அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் 14 ஆயிரம் சிறுமிகளுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் இந்த தடுப்பூசி போடப்படும். வரும் மார்ச் 8ம் தேதி முதல் 3 மாதத்திற்கு தினந்தோறும் வேலை நாட்களில் காலை 9 முதல் மதியம் 1 வரை மாணவிகளுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்.
அதன் பிறகு தடுப்பூசி திட்டங்களில் வியாழக்கிழமைகளில் வாரம் ஒரு நாள் போடப்படும். பெற்றோரின் முழு ஒப்புதல் பெற்ற பிறகே சிறுமிகளுக்கு தடுப்பூசி போடப்படும். இதில் பக்க விளைவு இல்லை. பாதுகாப்பானது. புதுச்சேரியில் தற்போது வைரஸ் காய்ச்சல் தான் உள்ளது. பறவைகாய்ச்சல் அறிகுறி இல்லை” என்று தெரிவித்தார்.