

பி.எம்.டபிள்யூ சென்னை ஆலையில் தயாரிக்கப்பட்ட ‘மினி கன்ட்ரிமேன் சி’ எஸ்யூவியை அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியாவின் தலைவர் ஹர்தீப் சிங் பிரார், நிர்வாக இயக்குநர் தாமஸ் தோஸ், சீனா, ஆசிய-பசிபிக் மினி நிறுவன துணைத் தலைவர் கியூன்ஸ்ட்னர்.
சென்னை: சென்னையில் நவீன வசதிகளுடன் தயாரிக்கப்பட்ட ‘மினி கன்ட்ரிமேன் சி’ எஸ்யூவி, இந்திய சந்தையில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது.
பி.எம்.டபிள்யூ குழுமத்தின் புகழ்பெற்ற பிராண்டான ‘மினி’ தனது புதிய மினி கன்ட்ரிமேன் சி எஸ்யூவி காரை இந்திய சந்தையில் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கான அறிமுக நிகழ்ச்சி செங்கல்பட்டில் நடைபெற்றது.
இந்த புதிய தலைமுறை கார், பிஎம்டபிள்யூ குழுமத்தின் சென்னை ஆலையில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் முதல்முறையாக உள்நாட்டிலேயே பி.எம்.டபிள்யூ ஆலையில் அசெம்பிள் செய்யப்படும் முதல் மினி கன்ட்ரிமேன் கார் இதுதான்.
இதில் சக்திவாய்ந்த 1.5 லிட்டர் 3 சிலிண்டர் ‘மினி ட்வின்பவர் டர்போ’ என்கிற அதிநவீன பெட்ரோல் இன்ஜின், 7-ஸ்பீடு டபுள் கிளட்ச் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இதன்மூலம் 156 ஹெச்.பி குதிரைத்திறனையும், 240 என்.எம். டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தும் மினி கன்ட்ரிமேன் சி எஸ்யூவி 60 லிட்டர் எரிபொருள் கொள்ளளவுடன், ஒரு லிட்டருக்கு 15.92 கி.மீ. மைலேஜை வழங்குகிறது.
இத்துடன் 190 மிமீ தரை இடைவெளி, 505 லிட்டர் பூட் ஸ்பேஸ் (1,450 வரை அதிகரிக்கலாம்), எல்இடி முகப்பு விளக்குகள், 19 இன்ச் அலாய் வீல்கள், பனோரமா கண்ணாடி சன்ரூஃப், லெவல்-1 ஏடிஏஎஸ் தொழில்நுட்பம், டிஜிட்டல் கீ, 360 டிகிரி கேமராவுடன் கூடிய பார்க்கிங் அசிஸ்டென்ட்,12 ஸ்பீக்கர் கொண்ட ஹர்மன் கார்டன் ஆடியோ சிஸ்டம், பிரீமியம் உணர்வை தரும் வெஸ்சின் இருக்கைகள், 240 மிமீ வட்ட வடிவ ஓஎல்இடி டிஸ்ப்ளே போன்றவற்றையும் பெற்றுள்ளது.
இந்த கார் பிரிட்டிஷ் ரேசிங் கிரீன், ஸ்மோக்கி கிரீன், நானுக் ஒயிட், ஸ்லேட் ப்ளூ மற்றும் சில்லி ரெட் ஆகிய 5 கவர்ச்சிகரமான வண்ணங்களில் கிடைக்கிறது. நிகழ்ச்சியில் பி.எம்.டபிள்யூ குரூப் இந்தியா தலைவர் ஹர்தீப் சிங் பிரார் பேசும்போது, “வழக்கமான சொகுசு கார்களைவிட, இளமை துடிப்புடன் கவரக்கூடியதாக இந்த கார் இருக்கும்.
ஆரம்ப விலையாக ரூ.47.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்பதிவுகள் தொடங்கியுள்ளது. ‘மினி’ ஸ்மார்ட் பைனான்ஸ் மூலம் பூஜ்ஜியம் முன்பணம் மற்றும் மாதத் தவணையாக ரூ.56,990 செலுத்தும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு இறுதிக்குள் 19 நகரங்களில் 21 விற்பனை நிலையங்களுடன் மினி நிறுவனத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
சென்னை பி.எம்.டபிள்யூ ஆலையின் நிர்வாக இயக்குநர் தாமஸ் தோஸ், சீனா, ஆசிய-பசிபிக் மினி நிறுவனத்தின் துணைத் தலைவர் புளோரியன் கியூன்ஸ்ட்னர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.