ஆவின் நெய் விலை உயர்வு அறிவிப்பை திரும்பப்பெற பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை

ஆவின் நெய் விலை உயர்வு அறிவிப்பை திரும்பப்பெற பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை
Updated on
2 min read

சென்னை: ஆவின் நெய் விலை உயர்வு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அச்சங்கத்தின் தலைவர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்: “கடந்த 5 ஆண்டு திமுக ஆட்சியில் ஆவின் பாலுக்கான விற்பனை விலையை நேரடியாக உயர்த்தாமல் பலமுறை உயர்த்திட ஆவின் அதிகாரிகள் வித, விதமான திட்டங்களைப் போட்டு பாலில் கொழுப்பு சத்தையும் (4.5 % லிருந்து 3.5 % ஆக), பால் பாக்கெட் அளவையும் (500 மி.லி இருந்து 450 மி.லி ஆக) குறைத்து, விற்பனை விலையை குறைக்காமல், பொதுமக்கள் தலையில் மறைமுக பால் விற்பனை விலை உயர்வை திணித்து, பெரும் இன்னலுக்கு உள்ளாக்கி வந்தனர்.

இந்த நிலையில் திமுக ஆட்சி மாறி, புதிய ஆட்சி வந்த பிறகும் "ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை” என்பதை நினைவூட்டும் விதமாக ஆவின் அதிகாரிகளின் செயல்பாடுகள் அமைந்து, தற்போதைய புதிய ஆட்சியில் ”ஆட்டை கடித்து, மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடிக்க வந்த கதை” போல ஆவின் நெய்க்கு பொது மக்களுக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையில் (MRP) எந்த ஒரு மாற்றமும் செய்யாமல் மொத்த விநியோகஸ்தர்களுக்கான விலையில் 500 மி.லி ஆவின் நெய்க்கு ரூ.5.25ம் (327.17 லிருந்து 332.42 ஆகவும்), ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.23.10ம் (627.62 லிருந்து 650.72 ஆகவும்), பால் முகவர்கள் மற்றும் சில்லரை வணிகர்களுக்கான விலையில் 500 மி.லி ஆவின் நெய்க்கு ரூ.3.15ம் (339.45 லிருந்து 342.60 ஆகவும்), ஒரு லிட்டர் நெய்க்கு ரூ.13.65ம் (651. 13லிருந்து 664.78ஆகவும்) ஜுலை 15ம் தேதியில் இருந்து உயர்த்தி பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் வயிற்றில் அடிக்கும் வகையில் ஆவின் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ் ஐஏஎஸ் அவர்கள் கடந்த 14ம் தேதியிட்ட கடிதம் வாயிலாக உத்தரவிட்டிருப்பதையும், அதனை சத்தமின்றி அமுல்படுத்தி இருப்பதையும் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஏற்கனவே ஆவின் பால் விநியோகம் மற்றும் விற்பனை மூலம் பால் முகவர்களுக்கும், சில்லறை வணிகர்களுக்கும் சொற்ப அளவே வருமானம் கிடைப்பதால் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆவினில் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் என்பது பால் முகவர்களுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இந்த சூழலில், பால் முகவர்கள் ஆவின் நெய் விற்பனை மூலம் ஓரளவிற்கு வருமானத்தை ஈட்டி, தங்களது கடை வாடகை, மின்சார கட்டணம், பணியாளர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களை ஈடு செய்து வந்த நிலையில் தற்போது பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்கள் மீது திணிக்கப்பட்டுள்ள ஆவின் நெய் விலை உயர்வு அறிவிப்பானது பால் முகவர்கள், சில்லறை வணிகர்களின் வாழ்வாதாரத்தை அபகரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் செயலாகும்.

எனவே பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள் மற்றும் மொத்த விநியோகஸ்தர்களின் வயிற்றில் அடிக்கும் ஆவின் நெய் விலை உயர்வு குறித்த ஆவின் நிர்வாக இயக்குநர் அஜய் யாதவ் ஐஏஎஸின் இந்த உத்தரவை உடனடியாக ஆவின் நிர்வாகம் திரும்பப் பெற வேண்டும். எங்களது வாழ்வாதாரத்தை அபகரிக்கும் அந்த உத்தரவை ஆவின் நிர்வாகம் திரும்பப் பெறாத பட்சத்தில் தமிழ்நாடு முழுவதும் ஆவின் நெய் விற்பனையை புறக்கணிப்போம் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆவின் நெய் விலை உயர்வு அறிவிப்பை திரும்பப்பெற பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை
‘விளாத்திகுளம் எம்எல்ஏ அராஜகமான முறையில் கைது’ - தவெக அரசுக்கு கனிமொழி கண்டனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in