

பேருந்துகள் நிறுத்தத்தால் வெறிச்சோடிய சாலைகள்.
ஓசூர்: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு பகுதியில் புதிய அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சிக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக இரு மாநிலங்களி்ன் எல்லையில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பால் தமிழக பேருந்துகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டில் கர்நாடக அரசின் அணை கட்டும் திட்டத்தைக் கண்டித்து தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே போல், தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தமிழகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என இன்று ஓசூர் அருகேயுள்ள தமிழக எல்லையில் கர்நாடகா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தும், மேகேதாட்டை நோக்கி பேரணி செய்வதாக போராட்டம் அறிவித்தனர்.
ஓசூர் அருகே தமிழக எல்லையான ஜூஜூவாடி தமிழக போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
அதே போல் தமிழக விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு போட்டியாக, கர்நாடக எல்லையில் உள்ள கன்னட அமைப்புகளும் தீவிரப் போராட்டத்தில் இறங்கி உள்ளனர். “மேகேதாட்டில் கண்டிப்பாக அணை கட்டியே தீருவோம்" என்று முழக்கமிட்டு, தமிழகத்தைக் கண்டிக்கும் வகையில் இன்று கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஒரே நாளில் இரு மாநில எல்லையிலும் அடுத்தடுத்து போராட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி இரு மாநில எல்லைகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலம் அத்திப்பள்ளியில் கர்நாடகா போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.
மேலும் இரு மாநில எல்லையில் நடைபெறும் ஆர்பாட்டத்தால், தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள் ஓசூர் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆனால் கர்நாடகா மாநில பேருந்துகள் தமிழகத்திற்குள் வழக்கம்போல் அனுமதிக்கப்படுகின்றன.
மற்றபடி கார், சரக்கு வாகனங்கள் வழக்கமாக சென்று வருகின்றன. ஓசூரிலிருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் பயணிகள் தமிழக மாநில எல்லை வரை செல்லும் நகரப் பேருந்துகளில் சென்று அங்கிருந்து ஆட்டோக்கள் மூலம் அத்திப்பள்ளிக்குச் சென்று பின்னர் அங்கிருந்து பெங்களூரு செல்கின்றனர். இதனால் தமிழக பகுதிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.